பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. తామిநாதம் 49

களுக்கு இத்தகைய ஆற்றல் இராது. அவர்கள் வெள்ளை மனம் படைத்து வெளிப்படையாக நடக்கவும், பேசவும் செய்வர். அவர்களிடத்துப் பழகி, அவர்களுடைய பேச்சு, நடத்தை பழக்க வழக்கங்கள், குணம், ஒழுக்கம், பண்பாடு ஆகியவைகளை அறிந்து, அவர்களது பெற்றோர்கள் தக்காரா? தகவிலரா? என்பதை நன்கு அறியலாம் என்ற வள்ளுவரது கருத்து எவ்வளவு அழகானது. சிறந்த உரை யாசிரியராகிய பரிமேலழகரே இதை மக்களுக்கு வழங்கி யிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

'இளமையில் கல்' என்பது தமிழ்ப் பாட்டியின் கட்டளை. பிள்ளைகளைப் படிக்க வைப்பது பெற்றோர் களின் கடமை. கல்வி பயின்று வரும்பொழுது குழந்தை களின் மனப் போக்கை அறியவேண்டும் அவற்றின் எதிர் காலத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்குரிய கல்வியையே கற்பிக்கவேண்டும். குறிக்கோள் இல்லாத கல்வி பயனற்றது. அது செல்ல வேண்டிய இடத்தைக் குறி யாமல் சாலையில் நடந்துகொண்டே இருப்பதைப் போன்றது.

கல்வியின் அருமை. பெருமைகளை இளமை நன்கு அறியாது அவர்களின் விளையாட்டுப் புத்தியும் கல்வியைக் கெடுத்துவிடும். சில துடுக்குத் தனத்தினால் துள்ளித் திரியும். அத்தகைய பிள்ளைகளின் மீது பெற்றோர் அதிக அக்கரை கொண்டு திருத்தியாக வேண்டும். அன்பும், ஆசையும் கொண்டு திருத்தாமல் விடுவது அவர்களுக்குப் பெருந் தீமை விளைவிப்பதாகும். பெற்றோர் தம் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்காமல் எவ்வளவுதான் செல்வத்தைக் கொட்டிக் குவித்து வழங்கினாலும் அது அவர்களுக்குப் பயன் தராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/51&oldid=956477" இலிருந்து மீள்விக்கப்பட்டது