பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#1 ஆற்றங்கரையினிலே

ராஜன் உடன் பிறந்த குந்தவைப் பெருமாட்டியின் தனி மாளிகையொன்று அந்நகரில் அமைந்திருந்தது. கங்கைகொண்ட சோழன் என்று தமிழகம் பாராட்டும் இராஜேந்திரன் இளமைக் காலத்தில் அந்நகரிலுள்ள அரண்மனையில் வாழ்ந்தான் என்று அவன் வரலாறு கூறுகின்றது. இம் மன்னன் அரசாளத் தொடங்கிய பின்னர் முடிகொண்ட சோழபுரம் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது அந்நகரம். முடி கொண்ட சோழன் என்பது அப் பெரு மன்னன் பெற்ற விருதுப் பெயர்களில் ஒன்று. பழம் பெருமை வாய்ந்த தலைநகரின் வளம் பெருக்கக் கருதி, அம் மன்னவன் காவேரியினின்றும் கொணர்ந்த நதி முடிகொண்டான் ஆறு என்றே இன்றளவும் வழங்கி வருகின்றது.

சோழ மாளிகையைச் சூழ்ந்து நான்கு படை வீடுகள் நன்கு அமைந்திருந்தன. பம்பைப் படையும் புதுப் படையும் ஆரியப் படையும் மனப்படையும் நெடுங்காலமாக நின்று நிலவிய இடங்கள் நாளடைவில் தனித்தனி ஊர்கள் ஆயின. இப்போது சோழ மாளிகை என்பது ஒரு சிற்றுளின் பெயர். முன்னாள் இருந்த அரண்மனையின் அடையாளங்கள் இந்நாளிலும் அங்கு உண்டு. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை அவ்வூரில் நின்ற மதிற் சுவர்களை ஆங்கில அரசாங்கம் இடித்து அழித்தது என்று அறிந்தோர் கூறுவர். அந்த இடத்தைச் சுற்றிப் பம்பைப் படையூர், புதுப் படையூர், ஆரியப் படையூர், மணப்படையூர் என்னும் நான்கு ஊர்கள் இன்றும் காணப்படுகின்றன.

அந்நகரின் வடபால் நின்ற பழைமையான ஈசன் கோயில் வடதளி என்று அழைக்கப் பெற்றது. புறச் சமயத்தார் பழையாறையில் ஆதிக்கம் பெற்றிருந்த போது அத் திருக்கோயிலின் உள்ளே எவரும் செல்ல முடியாதபடி மறித்துத் தடுத்து மறைந்திருந்தனர். அப்பதியை வழிபடப் போந்த திருநாவுக்கரசர் மாற்றார் இயற்றிய வஞ்சனையை