பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஆற்றங்கரையினிலே

திருக்குடந்தையில் பல்லாண்டு வாழ்ந்து அப் பதியைப் புனிதமாக்கிய பெரியார்களுள் ஒருவர் திருமழிசை யாழ்வார். ‘திருமழிசைப் பிரான் உகந்த இடம் ‘ என்று குடந்தையைப் புகழ்ந்துரைத்தார் பெரிய வாச்சான் பிள்ளை. குடந்தை மாநகரிலே கண் வளர்ந்த திருமாலைக் காணுந்தோறும் திருமழிசையார் காதல் பெருகிற்று; நினைக்குந்தோறும் அவர் நெஞ்சம் உருகிற்று.

‘ என் ஐயனே காடும் கரையும் அலைந்தமையால் உன் கால்கள் அலுத்தனவோ? திருமேனி சலித்ததோ? காவிரிக் கரையிலுள்ள குடந்தைக் கோவிலுள் பள்ளி கொண்டு இளைப்பாற்றிக் கொள்கின்றாயோ? அடியேற்கு நீயே அன்பாவாய் ! ஆரமுதம் ஆவாய் ! இன்பாவாய் ! எல்லாமும் நீயே ஆவாய் ! என்னை முகம் பாராயோ ! எழுந்திருந்து பேசாயோ ! என்று முறையிட்டார்.”

வடநாட்டில் நிகழும் கும்பமேளா என்னும் விழாவைப் போன்று கும்பகோணத்தில் பன்னிராண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது மாமாங்கம் என்னும் மகாமகம். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாக நடந்து வரும் மகாமக விழாவிலே கோடிக்கணக்காக மக்கள் கூடுவர்; புனிதநீர் ஆடுவர் ஈசன் புகழ் பாடுவர்.

இத்தகைய சீர்மை வாய்ந்த குடந்தையம்பதியில் கலை வளர்க்கும் கல்லூரி யொன்று சிறப்புற்று விளங்குகின்றது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் வடகரையில் கண்ணுக்கினிய சோலையின் நடுவே காட்சியளிக்கும் அக்கலைக் கோயில் தமிழ் நாட்டுத் தலைவர் பலரை உருவாக்கித் தந்த பெருமை யுடையதாகும்; எண்ணிலும் எழுத்திலும் வல்லார் பலரை ஈன்றளித்துப் பிறநாட்டு நல்லறிஞர் சூட்டிய புகழ் மாலையும் பெற்ற பதியாகும். - - -