பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர் 46

“ வென்நெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே “

என்று பரிந்து பாடிய பொழுது கபிலர் கண்ணிர் வடித்துக் கரைந்து உருகினார். மனங் கலங்கி நின்ற மங்கையர் இருவரையும் தகைசான்ற தலைவர்க்கு மணஞ்செய்து கொடுத்தல் தம் கடன் என்று கருதி அவரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையினின்றும் புறப்பட்டார். குறுநில மன்னனாகிய விச்சிக்கோனிடம் போந்து, “கோவே ! இம் மங்கையர் முல்லைக்கொடி படர்வதற்குத் தேர் அளித்த பாரி வள்ளலின் மக்கள். இவரை மணந்துகொள்க’ என்று வேண்டினார். ஆயினும் விச்சிக்கோன் அவர் கருத்திற்கு இசைந்தானில்லை. அதனால் ஊக்கம் குன்றாத புலவர் பெருமான் இருங்கோவேள் என்னும் சிற்றரசனிடம் இருவரையும் அழைத்துச் சென்றார். அம் மங்கையர் யார் என அறிய ஆவலுற்ற அம் மன்னனை நோக்கி, “இவர் தந்தை பாரி அவர் தோழன் யான். அந்த முறையில் இவர் என் மக்கள். இவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்க” என்று வேண்டினார். பெருங்குடிப் பிறந்த இருங்கோவேளும் அதற்கு இணங்கினானில்லை.

“ முயற்சி யுடையார் இகழ்ச்சி யடையார் “ என்னும் முதுமொழியை நம்பிய கபிலர் திருக்கோவலூரை நாடினார். வள்ளலாகிய திருமுடிக்காரியின் வழிவந்த குறுநில மன்னன் ஆட்சி புரிந்த அந் நகரில் தம் ஆசை நிறைவேறும் என்று எண்ணினார். அவர் எண்ணிய வண்ணமே பாரியின் பெண்களை ஏற்றுக்கொள்ள இசைந்தது காரியின் பெருங்குலம். அக் குலத்தைச் சேர்ந்த இருவர்க்குப் பாரி மகளிர் இருவரையும் மணம் செய்து கொடுத்தார் கபிலர் கடமை தீர்ந்தது என்று கவலை துறந்தார்.