உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183


ராதையின் பிரிவுதான் கண்ணனின் சஞ்சலத்திற்கும், மாற்றத்துக்கும் காரணம் என்பதை அறிந்த தாய் ஆச்சரியப்பட்டாள்; அமைதியடைந்தாள்.

“ஆகட்டும் கண்ணே, முன்னாலே இதைச் சொல்லியிருக்கப்படாதா? நாங்கள் பயந்துவிட்டோமே......நல்ல வேளை...எங்கள் வயிற்றில் பாலை வார்த்தாய்!”

அன்று மாலை ரயிலுக்குப் புறப்பட ஆனந்தனும் கண்ணனும் ஆயத்தமாகினர்.

அதே சமயம் வாசலில் ஜட்கா ஒன்று வந்து கின்றது. அதிலிருந்து குதித்து வந்த ராதையைப் பார்த்த கண்ணணுக்குத் தன் விழிகளையே நம்ப இயலவில்லை.

“ராதை,” என்றான் கண்ணன்.

“அத்தான்,வ என்றாள் ராதை.

இடைவேளை கழிந்து சந்திக்கும் காதலர்கள் போலக் குழந்தைகள் இருவரும் களிப்புற்றார்கள்; சிரித்து மகிழ்ந்தார்கள்.

ராதையின் தந்தை கோபுவை வரவேற்ற ஆனந்தன், “கோபு, நான் கண்ணனை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்படத் தயாராக இருந்தேன். ராதையைப் பார்த்தால்தான் உண்டு என்று துடித்து விட்டான். நல்லவேளை நீங்களே ராதையைக் கூட்டி வந்து விட்டீர்கள்,” என்றான்.

“ஆனந்தன், குழந்தை உள்ளம் அதி விசித்திரமாக இருக்கிறதே. ராதை என்னிடம் அத்தானைப் பார்க்க வேண்டுமென்று பாடாய்ப்படுத்தி விட்டாள். அவள் பேச்சுக்கு எவ்வளவுதான் டிமிக்கி கொடுக்க முடியும்?