பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இல் குன்றக்குடி அடிகளார்

வலியும் தீர்கிறது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள செல்வமுத்துக் குமரனுக்கு இரவிற் சாத்தும் சந்தனக் காப்பு மருத்துவத்தன்மையுடையது. இச்சந்தனக் குழம்பை நாள்தோறும் பருகி வந்தால் நோய்கள் நீங்கும்; ஆற்றல் பெருகும்; அழகு வளரும். திருக்கோயில்கள் என்றாலே திருத்தல் மரங்கள் உண்டு. இப்புண்ணியத் தலமரங்கள் மருந்து மரங்களேயாம். வேம்பு, நாவல், வில்வம், திருஆத்தி ஆகியன சிறந்த தலமரங்களாகும். இவற்றின் மருத்துவத் தன்மை அளப்பரியது. நாள்தோறும் ஐந்து வில்வம் தின்று வந்தால் உடல் பொன்னிறமாகும்; இரத்தம் சுத்தியாகும். முன்கூறிய வில்வம், நாவல், வேம்பு ஆகிய தழைகளில் ஐந்தைந்து எடுத்தரைத்து, கெட்டி மோரில் கலக்கி, நாள் தோறும் உண்டு வந்தால் நீரிழிவு நோய் வரவே வராது. வந்திருநதாலும் போம்.

எல்லாவற்றையும் கடந்து மேவி வாழ்ந்து வரும் பொழுதில் சிலருக்கு நாள், கோள்களில் அச்சம். நாள் கோள்களை நினைந்து அஞ்சுதல் பேதைமை. அறிவறிந்த ஆள்வினையுடையார்க்கு நாளும் கோளும் நன்மையே செய்யும். ஈசன் அடியார்க்கு என்றும் இன்பமே செய்யும். ஆயினும், அஞ்சிச் சாவாரை என்ன செய்ய முடியும்? ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், "வேயுறுதோளிபங்கன்" என்று பதிகம் அருளிச் செய்து, அதில் நாளும் கோளும் நல்லவையே என்றருளிச் செய்துள்ளார். ஆயினும் இன்னமும் அஞ்சுவார் பலருண்டு. அவர்தம் அச்சத்தை நீக்கும் வகையில் திருநள்ளாற்றில் நளனைப் பிடித்திருந்த சனி நீங்கியதாக ஒரு வரலாற்று நிகழ்ச்சி உண்டு. இதுவும் ஒரு கலை.