உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆலைக் கரும்பு

ண்ணினால் பார்க்கும் பார்வையோடு, கருத்தும் இணையா விட்டால், அந்தப் பார்வையினால் எவ்வகை உணர்ச்சியும் உண்டாவதில்லை. கருத்தோடு இணைந்து பார்க்கும் பார்வையிலும், அந்தக் கருத்து உடையவனது மனப் பாங்குக்கு ஏற்றபடி போக்கும், பயனும் அமைகின்றன. விகாரமான வேடம் புனைந்து வரும் கோமாளியைக் கண்டு, நாம் சிரிக்கிறோம். ஆனால், அவனைக் கண்ட குழந்தை, அஞ்சி ஓடி ஒளிகிறது. வானத்திலே பறக்கும் கருடனைக் கண்டால், நம் நாட்டில் இருக்கும் கிராமவாசிகள் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். அது திருமாலினுடைய வாகனம் என்ற நினைப்பினால்தான் அப்படிச் செய்கிறார்கள் கிறிஸ்தவ நண்பரோ, முஸ்லிம் சகோதரரோ அப்படிச் செய்வதில்லை.

கலைஞன் உலக முழுவதையும் அழகு உருவமாகப் பார்க்கிறான். கள்ளிச் செடியிலே ஓர் அழகையும், அதன் முள்ளிலே ஓர் அழகையும், அதன் பூவிலே மற்றோர் அழகையும் பார்க்கிறான். கடற்கரைக்கு நாள் தோறும் போய் வரும் மக்கள், அங்கே வீசும் காற்று நன்றாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆனால், எல்லையற்ற கடல் அலைகள் புரண்டு வரும் கோலத்தையும், சுருண்டு ஆலித்துப் பாயும் அழகையும் பார்ப்பதில்லை. அலைகளாகிய கைகளைக் கொட்டி முழங்குகிறது கடல் என்று பாரதியார் சொல்லுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/7&oldid=1638677" இலிருந்து மீள்விக்கப்பட்டது