பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 19

சூரிக் பல்கலைக் கழகம் முதல் இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் முழுவதும் பரவியது. அதனால், அந்த பல்கலைக்கழகம் அவருக்கு தத்துவப் பேராசிரியர் என்ற பட்டத்தைக் கொடுத்துப் பாராட்டியது.

அந்தப் பட்டம் பெற்ற ஐன்ஸ்டைன், தனது சார்பு நிலைக் கொள்கை Theory of Relatirity என்ற நூலை ஆய்வு விளக்கத்தோடு வெளியிட்டார். இந்த நூலில், இடம் காலம், அண்டம் என்பவற்றைப் பற்றிய விளக்கமும் ஆய்வும் இடம்பெற்றன. அந்த நூலுக்கு ‘சார்பு நிலைக் கொள்கை’ என்ற பெயரை அவர் சூட்டினார்.

இந்த நூல் வெளி வந்ததும் விஞ்ஞான உலகத்திலே ஒரு பெரும் மாற்றத்தைத் தந்தது. எல்லா சிந்தனையாளர்களும் ஆல்பர்ட்டின் அறிவியல் புரட்சிகளைப் பற்றியே பேச ஆரம்பித்தார்கள். இந்த ஆராய்ச்சிக் கருமீது மற்ற விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து வரும் நிலை ஏற்பட்டது.

இந்த நூலினுள்ளே கூறப்பட்ட ஆராய்ச்சியின் உருவம்தான் அணுகுண்டு என்ற பயங்கரத்தை உருவாக்கியது. இந்த அணுகுண்டு கண்டு பிடிப்பு, விஞ்ஞான உலகத்தையே ஆட்டிப்படைத்து அச்சுறுத்தியது. அதற்கான முழு விவரங்களை அறிய ஆல்பர்ட்டைத் தேடி அறிவியல் உலகம் வந்தது. அதனால், சூரிக் பல்கலைக் கழகம் அவருக்கு பேராசிரியர் பணியை வழங்கியது. இந்தப் பணியை, 1909-ஆம் ஆண்டில், தனது முப்பதாவது வயதிலே பெற்று, உலகப் புகழ் பெற்றார்.

பல்கலைக் கழகங்கள் தோறுமுள்ள விஞ்ஞானக்கழக அழைப்புகளை ஏற்று தனது கண்டுபிடிப்புக்களைப் பற்றி விளக்கமாக உரையாற்றுவார். பத்திரிகைகளிலே எழுதுவார்; அறிவியல் வித்தகர்கள் அவையிலே பேசுவார். இதற்கே அவருக்குரிய நேரம் போதவில்லை.