பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 75


கல்லூரிக் கல்விக்கு விலை மதிப்பே கிடையாது. ஆனால், அங்கே போய் அந்த புனித இடத்தை அரட்டை அரங்கமாக மாற்றக் கூடாது; அறிவை வளர்ப்பது மாத்திரமே கல்வியின் நோக்கமாக இருக்கக் கூடாது! எதையும் ஆய்ந்து பார்த்து வாழக் கற்றுக் கொள்ளும் பண்பாடுகளையும் பெற வேண்டும் என்றவர் ஐன்ஸ்டைன்.

அறிவை வளர்க்கும் புத்தகங்களை மாணவர்கள்தான் படிக்க வேண்டும் என்பதல்ல; ஒவ்வொரு மனிதனும் புத்தகங்களைக் கற்பதன் மூலம் அவனவன் அறிவை வளர்த்துக் கொண்டு வாழ வேண்டும் என்று கல்விக்கு வரம்பு நிர்ணயித்தவர் ஐன்ஸ்டைன்.

அணுகுண்டு கண்டு பிடித்தவன் தான் நான் என்றாலும், அதற்காக போர்முனைகளை ஆதரிப்பவன் அல்லன் நான். சமாதானமே உலகத்தின் விலை மதிக்க முடியாத தத்துவம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பார்த்து, சமாதானத்துக்கான அமைதி தொண்டுகளைப் புரிபவன் தான், செயற்கரிய செயல் செய்யும் சான்றோனாக முடியும் என்று போருக்கு எதிரியாக, அமைதிக்கு காவலாக விளங்கும் மனம் கொண்டவராக விளங்கினார் ஐன்ஸ்டைன்.

ஒவ்வொரு மனிதனும் தனிமையிலே இனிமை காண வேண்டும். அதைத்தான் வடலூர் வள்ளல் பெருமானும் “தனித்திரு” என்றார். அதே கொள்கையினையே ஐன்ஸ்டைன் தனது வாழ்நாள் முழுதும் கையாண்டார்.

தனித்து சிந்தனை செய்பவன் எவனோ, அவனே தனித்திறன் பெற்றதனாகத் திகழ முடியும் என்பதை ஐன்ஸ்டைன் தனது வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டிய சிந்தனை மகானாக விளங்கினார்.