பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பள்ளியெழுச்சிப் பாடல்கள்


அரங்கனுக்குப் பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடினார் தொண்டரடிப் பொடியாழ்வார். அப்பாடல்கள் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் என்று புகழ் பெற்று விளங்குகின்றன. இந்தத் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் விருப்பமுடன் பாடப்படும் பாசுரங்கள் ஆகும். வைணவர்கள் அனைவரும் பக்தியுடன் பாடும் பாசுரங்களாகும். திருவரங்கத்தில் திருமால் கிடந்த கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பது திருமாலின் திருக்கோலங்களில் ஒன்றாகும். அதில் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) பெரிய கோவில் வைணவ திவ்ய தேசங்களில் முதலிடம் பெறுகிறது. முதலாவதாகக் கூறப்படுகிறது. சயனத்தில் உள்ள பெருமாளை எழுப்ப திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. தொண்டரடிப் பொடி ஆழ்வார் இத்திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடியுள்ளார். இந்த ஆழ்வார் பாடியுள்ள திருமாலையும், திவ்யப் பிரபந்தத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. இவ்விருபாடல் தொகுதிகளும் வைணவப் பெருமக்களுக்கிடையிலும் விரும்பிப் பாடப்படுகின்றன.

தொண்டரடிப் பொடியாழ்வாரின் இந்தச் சிறப்பு மிக்க திருப்பள்ளி எழுச்சிப் பாசுரங்கள் பாரதியாரை மிகவும் கவர்ந்திருக்கிறது. தூக்கத்தில் இருந்த அரங்கனை எழுப்பப் பக்தர்கள் கூடி நின்று பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியதை மகாகவி பாரதி நினைத்துப் பார்க்கிறார். சிந்தித்துப் பார்க்கிறார். அவருடைய சிந்தனையில் அரங்கன் பாரத மாதாவின் வடிவத்தில் தோன்றுகிறார். அரங்கன் தூக்கத்தில் உரக்கத்தில் இருப்பதைப் போல பாரத மாதா உரக்கத்தில் இருப்பதைப் போல நினைத்துப் பார்க்கிறார்.