உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஆப்பிரிக்கர் போன்ற நாடுகளில் பழைய பண்பாட்டு இலக்கியங்கள் இல்லாமையால் நேரே மேல் நாட்டுக் கலை, மொழி பழக்க வழக்கங்கள் மிகுதியாகப் பின்பற்றப்பட்டு விட்டன. இன்று நீக்ரோக்கள் ஆங்கிலேயரின் நடையுடை பாவனைகள் நடனம் இசை முதலியவற்றை அவர்களைவிட மேம்பட்ட நிலையில் கற்றுப் புகழ் மிக்கவர்களாக விளங்குகின்றனர். மைக்கேல் ஜாக்சன் இன்று உலகம் பாராட்டும் இசைக்கலைஞர் என்று பாராட்டப்படுகிறார். அரேபிய நாடுகளில் இஸ்லாம் பின்னணி வலுவாக இருந்தபோதும் எண்ணெய் ஊற்றுகளால் பொன் கொழிக்கும் நாடாக மாறுவதால் மேலை நாட்டு வசதிகளை வளர்த்துக்கொண்டு வருகின்றன. அமெரிக்கா தேசம் பல தேசங்களின் குடியிருப்பு நாடாக இருப்பதால் அதற்குப் பழைமை என்பதன் அடிச்சுவடே இல்லாமல் ஐரோப்பியப் பண்பாட்டில் வளர்ந்து வருகிறது. அமெரிக்கர்களும் ஆங்கிலமே பேசுவதால் ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடிப்படையில் அந்த நாட்டு மக்கள் வாழ்வியல் அமைந்துள்ளது அவர்கள் உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அறிவும் ஆற்றலும் மிக்க இளைஞர்களை அங்குக் குடிபுக அனுமதிக்கின்றனர். கலை விளையாட்டு இவற்றில் முதன்மையானவர்களைக் குடியேறச் செய்ய இடம் தருகிறது, அதனால் அவர்கள் உலக நாடுகளில் எல்லாவகையிலும் முற்போக்கும் வளர்ச்சியும் கண்டுள்ளனர். அங்கே தனி மனிதன் முயற்சிக்கு அதிக வாய்ப்புத் தரப்படுகிறது. விஞ்ஞானமும் ஆராய்ச்சியும் தொழில் வளமும் மிக்கு உள்ளதால் இன்று அமெரிக்கா தனித்து விளங்குகிறது.

சீனாவும் ஜப்பானும் தத்தம் கலாச்சாரங்களை விட்டுக் கொடுக்காமல் தேவையான அளவிற்குப் பாரதத்தைப் போல் நல்லவற்றை மட்டும் பின்பற்றுகின்றன.

ஆங்கில மொழிக் கல்வி மொழியாக அமையுமானால் அதனோடு அவர்கள் கலாச்சாரமும் புகுந்துவிடுகிறது.