87
வீடு புகுந்து திருடுதல், கொள்ளை அடித்தல் வழிபறிக் கொள்ளைகள் முன்பெல்லாம் இல்லாத அளவு பெருகி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அங்கே முன்னர் குறிப்பிட்டபடி இந்த அச்சம் அதிகம் இல்லை. அமைப்பு முறையிலும் வாழ்க்கை முறையிலும் அடிப்படை வேறுபாடு இருக்கத்தான் வேண்டும். இல்லாமையால் செய்வது திருடு; அது ஒரு குடிசைத் தொழிலாக இருந்தது; கொள்ளையடித்தல் இப்பொழுது ஏற்பட்டுள்ள வளர்ச்சி; அது இல்லாமையால் செய்யப்படுவது அன்று. மிகுதியாக வேண்டும் என்ற ஆவல். இப்படியும் பிழைப்பது ஒருவழி தொழில் என்ற மனப்போக்கே இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி காண்பதைப் போல இத்துறையிலும் வளர்ச்சி மட்டும் அல்ல வேகத்தையும் காண்கிறோம். காவல் துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கிறது. அவர்கள் நேர்மை சில சமயங்களில் பரிசோதனைக்கும் ஆளாகிறது.
அமெரிக்காவில் சில இடங்களில் தனி வழியே போவது அஞ்சத்தக்கது என்று பேசப்படுகிறது. ‘பிக்பாக்கட்டுகள்’ வழிபறிக் கொள்ளை சிற்சில இடங்களில் சகஜமாக நடை பெறுகிறது என்று சொல்கிறார்கள். தனி மனிதர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை அங்கு உண்டு. இங்கே இங்கிலாந்தில் போலீசுகூட தேவை இல்லாமல் துப்பாக்கி ஏந்திச் செல்வது இல்லை. அவசரத் தேவை ஏற்படும்போது அனுமதி பெற்று அவர்கள் அதைக் கொண்டு செல்கின்றனர். இங்கே உயிர்க்குப் பாதுகாப்பு மிகுதி, இந்தியாவில் குறைந்து வருகிறது, பொருளுக்கும் பயணத் துக்கும் பாதுகாப்பு குறைந்து வருகிறது. அரசியல் தீர்வுகளையும் துப்பாக்கி முனையில் காணும் முயற்சிகள் அவ்வப்பொழுது தலையெடுத்து அடங்குகின்றன. பேச்சுரிமை ஆட்சி வழங்குகிறது; உயிர் அச்சம் அதைத் தடுத்து நிறுத்துகிறது.