பக்கம்:இசையின்பம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை


உலகமொழிகளில் தமிழ் மிகப்பழமை வாய்ந்தது. புதிய மொழிகள் வந்து நெருக்கும். இக்காலத்திலும், அது தலைநிமிர்ந்து நிற்கிறது. காலம் செல்லச்செல்ல அதன் இளம் பொலிவு வளம் பெறுகிறது. சங்கத்தமிழ் திட்பநுட்பமானது. கம்பத்தமிழ் அணியின்பத்தமிழ் கம்பனுக்குப்பிறகு ஆழ்வார், நாயன்மார், மணிவாசகர் முதலிய அருட்கவிகள் இயலிசைத்தமிழை வளர்த்தனர். அக்காலம் தனித்தமிழ்ப் பண்கள் முழங்கின. பிறகு தமிழ்ப்பண்கள் தற்காலம் வழங்கும் பெயர்களைத்தாங்கின. அருணாசலக் கவிராயர், வேதநாயகம்பிள்ளை, கோபால கிருஷ்ணபாரதியார், கவிக்குஞ்ச பாரதியார், சுப்புராமையர் முதலியோர் இசைத்தமிழுக்குப் புத்துயிரளித்தனர், தாயுமானாரும், அருட்பிரகாச வள்ளலாரும் தமிழில் தெய்வ ஒளி பாய்ச்சினர், தமிழ் புதுமை பெற்றது.

எனினும் இசையரங்குகளில் தெலுங்குப்பாடல்களே பெரிதும் முழங்கின. தமிழில் இசைப்பாடல்கள் இருந்தும் பாடுவாரும் தேடுவாருமின்றி அவை ஒலியொடுங்கின. இசையிலக்கணத்துடன் தமிழில் பாடவராது என்ற மயக்கமும் சிலர் மனத்தைப்பற்றிக் கொண்டிருந்தது.

தமிழ் மறுமலச்சிபெற்று வீறுடன் எழுந்தது. அத்துடன் தமிழிசை இயக்கமும் வெற்றிமுரசு கொட்டியெழுந்தது. அதை எதிர்க்கும் குரல்கள் ஏங்கி அடங்கின. தமிழிசையியக்கத்தின் பயனாக ஆயிரக்கணக்கான பழம் பாடல்கள் அரங்கேறின! தமிழ்ப்பழமையுடன் வற்றிப்போகும் மொழியன்று. அது மேன்மேலும் புதிய இன்பங்களுடன் பொலியும் தெய்வமொழி. தமிழில் இன்று புதுப்புதுப் பாமலர்களும், இசைமலர்களும், பூத்துச் சொரிகின்றன. தமிழிசையியக்கத்தின் பயனாகப் பல இசை நூல்கள் வெளி வருகின்றன.

அவற்றுள் திரு. கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்றிய "இசையின்பம்" ஒன்றாகும். இந்நூல் பல மேள ஜன்ய அபூர்வ ராகங்களில் அமைந்துள்ளது. தமிழ் நிகரற்றமொழி; தமிழிசை பேரின்பம் தருவது; அதைவளர்க்க வேண்டும்; மனிதவாழ்வு இறைவனுக்கு நிவேதனமாக வேண்டும்; சிவன், முருகன், சக்தி, ஆகிய இறைவடிவங்கள் நமக்கு அறம்பொருள் இன்பப் பயன்களைத்தரும் என்பது இந்நூலின் கருத்தாகும்.

இசையின்பப் பாடல்களைப்படித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

அரவிந்தாச்ரமம்

புதுச்சேரிசுத்தானந்த பாரதியார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/4&oldid=1242894" இலிருந்து மீள்விக்கப்பட்டது