உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16



கெட்ட வாடை அடிக்கிறது என்றனர், கேடு கெட்ட புத்தியினர்—நாசியுள்ளோர் முகர்ந்து பார்த்துக் கூறட்டும், மல்லிகை மணமுள்ள மலர் தானா, அல்லவா என்பதனை என்று எவரேனும் கூறி, ஒருவர் மல்லிகையை முகர்ந்து பார்த்து, செச்சே ! யாரப்பா, வீண் பழி சுமத்தினவன் ? மல்லிகை மணமாகத்தான் இருக்கிறது, என்று கூறினால், மகிழ்ச்சிக்குரிய சம்பவமாக, நாம் அதனைக் கூறமாட்டோம்—மல்லிகையின் மணத்தைச் சந்தேகிக்கும் அளவு மந்த மதியிருப்பதையும், அதனைச் சாதகமாக்கிக் கொண்டு,மல்லிகையைப் பழிக்குமளவு, சூது செய்யும் வஞ்சகர்கள் இருப்பதையும், எண்ணியே ஏங்குவோம். அது போலத்தான், ஓமந்தூரார் பெற்ற வெற்றி, நமக்கு, மகிழ்ச்சி பெறுவதற்குச் சந்தர்ப்பமாகப் படுவதை விட அதிக அளவுக்கு இந்த நாட்டிலே மிக மிக நல்லவர்களுக்கு எதிராகச் சதி செய்யும் பொல்லாதவர்கள் இருக்கிறார்களே, என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதனால் உள்ளம் துடி துடிக்கவுமான, சம்பவமாகத் தோன்றுகிறது.

போட்டி—தேர்தல்—இவை சகஜந்தானே ! ஜனநாயக இலட்சணமே போட்டிதானே. இது கண்டுநீ ஏன் வீணாகப் பதறுகிறாய், ஏதேதோ கூறிக் கதறுகிறாய். என்று கேட்பர் சிலர்.

குடி அரசுக் கோட்பாட்டின்படி, ஒரு அரசியல் கட்சிக்கும் மற்றோர் அரசியல் கட்சிக்கும் போட்டி ஏற்படுவது முறைதான்—அது தேவையுங்கூட. ஆனால் ஓமந்தூராருக்குப் போட்டி சொந்தக் கட்சியிலே முளைத்தது !!

இதுவும் சாதாரண சம்பவம்தான் என்பார் உண்டு. சொந்த இயல்பு சோடையாக இருக்கும் ஒருவருக்கு சொந்தக் கட்சியிலே, போட்டி ஏற்பட்டால், அது சாதாரண சம்பவமாக மட்டுமல்ல, காரணத்தோடு கூடிய சம்பவமாகக் கூடக் கருதலாம். ஆனால் ஓமந்தூராரை மாசிலாமணி என்று கூறினர்—விழியில் பழுதுள்ளவருங்கூட அவரிடம் வஞ்சனையோ சுயநலமோ இருப்பதாகக் குற்றம் சாட்ட வில்லை—அப்படிப்பட்ட அவருக்கு