பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24



சிலர்—அவர்கள் இனியும் அதைக்கூறுவர்— தமிழகக்காந்தி ராமசாமியைமட்டுமல்ல, திராவிடத் தந்தை ராமசாமியையும் ! இப்படி ஒரு கூட்டம் எதிர்த்தபடியே இருக்கும் அவ்வப்போது நேர்மையின் வெற்றிக்காக வேலை செய்தபடிதான் இருந்ததாக வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் தனிப்பண்போ? ஒரே கூட்டத்துக்குள் இருந்துகொண்டு, ஒரே கொடி, ஒரே கட்சி என்று சொந்தம் பேசிக்கொண்டு இருந்தாலும், தமிழகக் காந்தி என்று தக்கோர் புகழ்ந்தாலும், சுயநலக் கூட்டத்தாரின் குழ்ச்சியும் வியன்மகை வகுப்புவாத வெறியும், தாக்கியபடிதான் இருக்குமென்றால், காங்கிரஸ் ராமசாமியாக இருப்பவர் எந்த விதத்திலே திராவிட ராமசாமியைவிட அதிக மேலான நிலையில் இருக்கிறார் என்று கேட்கிறோம். உள்ளே இருந்தபடி, காங்கிரஸ் ராமசாமி உள்ளம் குமுறுவதும், வெளியே இருந்தபடி வேல் பாய்ந்த உள்ளத்துடன், திராவிட ராமசாமி இருப்பதுதானா, இனியும் நாட்டிற்குரிய இலட்சணம்? இந்த வேதனைதரும் நிலைபோக, மார்க்கமே கிடையாதா? பார்ப்பனத் துவேஷி பெரியார் என்று பகையை மூட்டினர். பாரத புத்திரர் என்று, பார்ப்பனர், அல்லாதவர், ஆகிய அனைவரையும் கூறிக்களித்துப் பெருமையடைந்த தமிழகக் காந்திக்கும். திராவிட ராமசாமிக்குள்ளது போன்றே எதிர்ப்பு இருக்கக்காண்கிறோம். ஏன் இந்த நிலை என்று கேட்க, நாட்டிலே நேர்மையாளர்கள் எவருமே இல்லையா? எந்த ரகமான ராமசாமியாக இருந்தாலும் எதிர்ப்பு நிலை, ஒரே அளவாகவும், குறிப்பிட்ட ஒரே இடத்திலிருந்தும் வருவதை ஏன் உணர முடியவில்லை, எப்போது உணருவர்?