பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்




இதே கால கட்டத்தில் 1906-ஆம் ஆண்டில் திருநெல்வேலி நகரிலிருந்து வேதமூர்த்தி முதலியார் என்பவர் ‘சர்வஜன. மித்திரன்’ என்ற இதழை நடத்தி வந்தார்.

20-ஆம் நூற்றாண்டில்

வந்த பத்திரிகைகள்

இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதிக் காலத்தை விடுதலைப் போரின் உச்சக்கட்டக் காலமாகக் கூறலாம். இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் பொங்குமாங் கடலலைகளைப் போன்ற தேசிய உணர்ச்சிகள் மக்களிடையே பொங்கிக் கொண்டிருந்த உத்வேகத்தை; அண்ணல் காந்தியடிகளின் அறப்போர்கள் நடத்திக் கொண்டிருந்தன.

ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறைகள், போர்க் கள வீரர்கள் மாறிமாறி எய்து கொண்டிருக்கும் அம்புகளைப் போல பறந்தோடி வந்து மக்களது விடுதலை உணர்வுகளைக் காயப்படுத்திப் புண்ணாக்கி, குருதியைக் கொப்பளிக்க வைத்துக் கொண்டிருந்தன.

இக் காலக் கட்டத்தில் இந்தியா முழுவதுமுள்ள பத்திரிகைகள் எல்லாம் ஆட்சிக்கு எதிராக அதனதன் கண்டனக் கருத்துக்களை வெளியிட்டுப் போராடிக் கொண்டிருந்தன. குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் தத்தம் கடமைகளை உணர்ந்து திறம்படச் செயலாற்றிய அருமை பெருமைகளை இப்போது காண்போம். -

‘இந்து’

நாளேடு

இந்து பத்திரிகை, தமிழ்நாட்டுப் பத்திரிகை உலகில் ஒரு விடிவெள்ளி ஏடாகும். ஜி. சுப்பிரமணிய ஐயர், சேலம் வழக்கறிஞ மேதை விசயராகவாச்சாரியார் போன்ற திறமைமிக்கவர்களின் செயலாற்றலால், நிர்வாக நிபுணத்துவத்தால், இன்று ‘இந்து’ உலக அளவில் உயர்ந்து ஒளிசிந்தும் விடிவெள்ளியாகத் திகழ்கின்றதையும்; நம் கண்ணெதிரிலேயே காட்சியாகக் காண்கின்றோம்.