பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

391



பத்திரிகைகளுக்குச்
சுதந்திரம் வேண்டும்

இருபது ஆண்டுகள் வரை மோகன் ராய் ஓயாமல் பத்திரிகைகளில் எழுதினார். அவர் எழுதிய நூல்களையும், ஆசிரியராக இருந்த பத்திரிகைகளையும் கணக்கிட்டால் ஒரு தனி மனிதர் செய்த காரியங்களா இவை? என்ற மலைப்பு உண்டாகும்.

வங்காள மொழியில் அவர் ‘ஒருவனே தேவன்’ கொள்கைக்கான பிரார்த்தனைப் பாடல்களை இயற்றினார். அவருடைய உரை நடை மிகவும் எளிமையானது. ஆனால், வலிமை மிக்கது. நவீன வங்காள உரைநடைக்கு அவரே வழிகாட்டி; அடிமைப்பட்டுக் கிடந்த இந்நாட்டில் தேசிய உணர்ச்சி ஊட்டி பத்திரிகைகளைத் தோற்றுவித்த முதல்வர் அவரே. “இந்திய தேசியப் பத்திரிகைகளின் தந்தை” என்றே அவ்ர் இன்றும் போற்றப்படுகிறார்.

முதல் பார்ஸீ வாரப் பத்திரிகையான ‘மிராத்-உல்-அக்பார்’ (அறிவுக் கண்ணாடி) அவரால் தொடங்கப்பட்டது. அதில் அரசியல் செய்திகளோடு விஞ்ஞானம், இலக்கியம், வரலாறு பற்றியக் கட்டுரைகளும் வெளி வந்தன.

கல்வித் துறை பற்றிய அவர் கருத்துக்களையும் அப்பத்திரிகை ஏந்தி வந்தது. அந்தப் பார்ஸீ பத்திரிகைக்கு முன்னால் அவர் வங்காளியில் ‘சம்வாத கெளமுதி’ என்று வாரப் பத்திரிகையை நடத்தினார்.

மக்களுடைய மனோ பாவத்தை வெளியிடுவதும், பிரதிபலிப்பதும், உருவாக்குவதும் பத்திரிகைகளின் பொறுப்பு. இப்பணியை மோகனர் செவ்வையாகச் செய்து வந்தார். அப்போது, இது அடிமை நாடுதானே?

ஆங்கிலேயர் ஆட்சியாளர்கள் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் வழங்க விரும்பவில்லை. தேசியக் கருத்துகளுடன் வெளியாகும் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தவும் விரும்பினார்கள்.