பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

33

என்று வெள்ளையர் திலகரிடம் கேட்டதாகக் கவி பாரதியார் பாடும் பாணியில், தென்னகத் தலைவரிடம் இந்தக் குட்டி ஏகாதிபத்தியம் சீறிப்பேசத் துணிந்துள்ளது! அந்தக் குட்டி ஏகாதிபத்தியத்தின் அடிவருடுகிற தன்மானமற்ற, தன் மொழிப் பற்றற்ற, தன் இனப்பற்றற்ற சொத்தைகளும் தம் சொத்தைப் பற்களைக் காட்டிச் சொத்தை வாதங்கள் பேசி வருகின்றன. தம் நொள்ளைக் கண்களை மறந்து திராவிட இன வீறுபெற்ற இளங்காளையர்களையும், வீரத்தாய் இனத்தின் உரிமை நங்கையர்களையும் பார்த்து நொள்ளைக் கண்ணரென்று விதண்டாவாதம் பேசி வருகின்றன.

திராவிடம் ஒரு தனி இனம், தனி நாகரிகம் வாய்ந்த தனிநிறை தேசீயம். பாரதம் என்று கூறப்படும் இந்தியாவோ, அதில் குறைபட்ட இன்றைய இந்தியக் கூட்டுறவோ தனித் தேசியமன்று என்பது மட்டுமல்ல, தனித் தேசியங்களின் ஒரு கூட்டுறவுகூட அல்ல. திராவிடம் போன்ற ஒரு சில தனித் தேசியங்களையும் தேசியமாக உருவாகாத பெயரில்லாப் பரப்புக்களையும் உள்ளடக்கிய ஒரு கதம்ப கூளம் அது!

திராவிடம் கீழ்திசையிலுள்ள பழம்பெரு வரலாற்றினங்களுள் ஒன்று-முக்கியமான, நடுநாயகமான ஒன்று. அது கீழ்திசைப் பேரினங்களின் உயிர் மையமான, அவற்றினிடையே மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த மூல-முதல் தேசிய இனம். திராவிடத்திற்கு ஓர் உயிர் வரலாறு உண்டு. நாகரிகம், நாகரிக வளர்ச்சி உண்டு. அதில் இடப்பரப்பு வகையிலோ, இன வகையிலோ, மொழி வகையிலோ உயர்வு தாழ்வுகள்/ கிடையா. அதிலுள்ள வேறுபாடுகள், மொழி வேறுபாடுகள்கூட, ஒன்றை ஒன்று நிறைவுபடுத்தும் ஒரே பெருந்தேசியத்தின் உறுப்பு வேறுபாடுகளே.