பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

அவன் திருப்தி அடைந்துவிடுகிறான். உண்மையில் இதுபோதுமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றல்லவா பாடினான் நமது பண்டைத் தமிழன், கடலும் மலையும் அவன் வளர்க்க விரும்பிய நல்லுறவுக்கு குறுக்கே நிற்கவில்லையே; கடல் கடந்து, மலை கடந்து, கட்டுத் தறி கடந்து எல்லாத் துறைகளிலும் பரிவர்த்தனை செய்து நல்லுறவை வளர்க்க அல்லவா முனைந்திருக்கிறான் அவன். ஏதோ யவனவர்களுடன் வியாபாரம் நடத்தியது போதும் என்றிருக்கவில்லை. சிங்களம், புட்பகம், சாவகம், தீவு பலவினும் சென்றேறி அங்கு தங்கள் புலிக் கொடியையும், மீன் கொடியையும் நிலை நாட்டியதோடு திருப்தியடைந்து விடவில்லை. கடல் கடந்து சென்ற தமிழர்கள், தமிழ் அரசர்கள் தங்கள் தங்கள் நாட்டிலிருந்து கலைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சென்ற சென்ற இடமெல்லாம் கலைக் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் ஜாவாவிலும், மலேயாவிலும், போராபுதூரிலும், பாங்காங்கிலும் தமிழகத்துக் கோயில்களையும் சிற்ப உருவங்களையும் நம்மால் இன்றும் காண முடியவா போகிறது? இப்படியெல்லாம் நல்லுறவை கலைஞர்கள் மூலம் வளர்த்திருக்கிறார்கள் நமது பண் டைய மன்னர்கள்.

இதெல்லாம் பழைய கதை. இன்று எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந் நாட்டு மன்னர் ஆதலால் இனி நல்லுறவை வளர்ப்பது மன்னர்கள் கடமையல்ல; மக்கள் கடமை. உலக மக்களிடையே நல்லுறவை எப்படி வளர்ப்பது என்பதுதான் பிரச்னை, அந்தப் பிரச்னையை கலை நிபுணர்

131