பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

முகக் கடவுள் பிரமன், நர்த்தன விநாயகன், மயிலேறும் பெருமாள், முருகன் முதலிய தெய்வத் திருவுருவங்களை எல்லாம் முதலில் கல்லில் செதுக்கினார்கள். இவைகளையெல்லாம் தூக்கி அடிக்கும் வகையிலே செப்புச் சிலைகள் பலவற்றையும் வடித்தார்கள். நடராஜனை, பிக்ஷாடனனை, கஜசம்ஹாரனை, அம்பிகையை எல்லாம் நல்ல நல்ல செப்புச் சிலைகளாக வடித்தது இச்சோழர்கள் காலத்தில்தான். நாயக்கர்கள், பாண்டியர்கள் எல்லாம் அவரவர்களால் இயன்ற அளவிற்கு இக்கலை வளர்ப்பதில் தக்க ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

இச்சிற்பக் கலையில் உள்ள சிறப்பு. என்னவென்றால் அந்த அந்த வடிவங்களை உருவாக்குவதில் தமிழகத்துச் சிற்பிகள் காட்டியுள்ள கற்பனைத் திறன்தான் எங்கும் நிறைந்தவன் இறைவன், நான்கு அல்லது எட்டுத் திசைகளிலும் பரவி நிற்கிறான் அவன் என்பதை உருவகித்துக் காட்டவே அவனுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைப் படைத்திருக்கிறார்கள். அண்ட சராசரங்களை எல்லாம் ஆட்டி வைக்கிறவன் இறைவன். அப்படி ஆட்டி வைக்கிறவன் தானும் ஆடிக் கொண்டே ஆட்டினால்தான் அண்டங்கள் ஆடும் என்று சிந்தித்திருக்கிறான் ஒரு கலைஞன். அவன் கற்பனையில் உதித்திருக்கிறான் நடன ராஜன். எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறது ஆண், பெண் என்ற தத்துவம். ஆணின்றிப் பெண்ணும், பெண்ணின்றி ஆணும் தனித்து வாழவோ உலக வளர்ச்சிக்குத் துணை புரியவோ இயலாது. இரண்டும் ஒன்றிய நிலையில்தான் உலகம் உய்யும் என்று உணர்ந்திருக்கிறான் ஒரு கலைஞன். அவன் தன் சிந்தனையில்

176