பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6 சைவ சித்தாந்தச் செம்மல்


“தத்துவ ஞானத்துறையில் பெரும்புலமை கொண்டு விளங்கிய பேராசிரியர் ‘ஈட்டன் கில்சன்’ என்பார், ‘சிவமாகிய செம் பொருள், தனது உண்மையினை உலகியல் வாழ்வில் சில காலங்களில் நமக்கு உணர்த்துகின்றது’ என்று கூறுகின்றார். ஒருவன் அடுக்கிவரும் இடுக்கண்களால் நெருக்குண்டு, நெஞ்சு சோருங் காலத்துக் கடவுளுண்மை அவன் உணர்வில் காட்சி யளிக்கின்றது. அவன், தன்னந் தனியனாய் இருக்குங்காலும், ஆழ்கடலின் ஆழமும்; மால்வரையின் மாண்பும், வேனிற் காலத்து நள்ளிரவில் விசும்பிடை வயங்கும் விண் மீன் கூட்டத்தைக் காணுங்காலும்,தன் வாழ்நாள் தனக்குரிய எல்லையை நெருங்குங்காலும் செம் பொருளாகிய கடவுள் உண்மை அவன் உணர்வில் தோன்றுகின்றது என்று கூறுகின்றார்!”

இவ்வாறு தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை 65ஆம் ஆண்டுவிழாவின் போது உரைவேந்தர், தமது தலைமைப் பேருரையைத் தொடங்கி, நீண்டதோர் சொற்பொழிவாற்றியதை அனைவரும் பாராட்டினர்.

உரைவேந்தர், சைவக் குடும்பத்தில் தோன்றியவராதலின், இயல்பாகவே சைவசமயப் பற்றுடையவராய்த் திகழந்ததில் வியப்பில்லை. தமிழையும் சைவத்தையும் தமதிருகண்களாகக் கொண்டொழுகிய சான்றோர் இவர். ‘தமிழ்க்கடல்’ எனப் போற்றப்படும் மறைமலையடிகளிடத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட உரைவேந்தரும், அவரைப் போலத் தாமும் தமிழிலும் சைவத்திலும் நிறை புலமை பெற்றுத் திகழவேண்டும் என்று கருதினாராதால் வேண்டும்!