பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பேராசிரியப் பெருந்தகை

27

அமர்ந்தார். ஆங்கு வேலைபார்த்த வடமொழி, பாலிமொழி போன்ற பிறமொழிப் பேராசிரியர்களின் அரிய நட்புக் கிடைத்தது!

கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளையின் வேண்டுகோட்கிணங்க, நாவலர் ந.மு.வே. நாட்டார், மணிமேகலைக் காப்பியத்திற்குப் புத்துரை எழுதும் பணியை மேற்கொண்டார். போதிய உடல்நலம் இன்மையால், தம் மகளார் சிவ. பார்வதியம்மையாரைக் கொண்டு பதவுரையும் விளக்கவுரையும் எழுதி, எஞ்சிய நான்கு காதைகளையும் சமய நூல்களை நன்கு ஆராய்ந்து எழுத வேண்டும் என்று எண்ணிய வேளையில், திடுமென இயற்கை எய்தினார். அதன் பின்னர்க் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற் கிணங்க, மணிமேகலையின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார் உரைவேந்தர். இப்பகுதிகள், புத்த சமயக் கோட்பாடு களையும் தருக்க முறைகளையும் விரிவாக இயம்புவன. எனவே, தாம் பணிபுரிந்த கீழ்த்திசைக் கல்லூரி வடமொழிப் பேராசிரியர் பிரபாகர சாத்திரியார், பாலிமொழிப் பேராசிரியர் ஐயாசாமி சாத்திரியார் ஆகியோரின் உதவியாலும் ஆங்கிருந்த நூல்நிலையத்து அரிய நூல்களின் உதவியாலும் விளக்கவுரை எழுதித் தம் ஆசிரியர்க்குப் புகழ் ஈட்டிக் கொடுத்தார்!

உரைவேந்தரின் புகழ், தமிழகமெங்கும் பரவத் தொடங்கிற்று. தமிழகத்தின் தலைசிறந்ததாகத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கற்று வல்ல பெரும் புலவர்களைப் பேராசிரியர்களாகக் கொண்டது; நாட்டுக்கும் நற்றமிழுக்கும் பாடுபடும் மாணவ நன்மணிகளை ஆண்டுதோறும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பது. அத்தகு சீர்சால் கழகம், உரைவேந்தரைத் தன்பால் ஈர்த்தது. 1943 சூன் திங்களில் அப்பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராக அமர்த்தப் பெற்றார். ஆங்கே, எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்!

உரைவேந்தரின் ஆராய்ச்சி மனப்பான்மைக்கு அப்பல்கலைக் கழகம் மேலும் உரமிட்டது. 'சைவ சமய இலக்கிய வரலாறு', 'ஞானாமிர்தம்' முதலான அரிய நூல்கள் இவரால் எழுதப்பட்டுப் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளாயின.

ஆங்கே பணிபுரிந்த பல்வேறு பேராசிரியர்களிடம் பழகவும், நட்புக் கொள்ளவும் உரைவேந்தருக்கு நல்வாய்ப்பாயிற்று. அவர்களில் கல்வெட்டுப் பேரறிஞர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், இலக்கண, வரலாற்று ஆய்வாளர் க. வெள்ளைவாரணனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர் கல்வெட்டு ஆராய்வதில் முன்பே அனுபவம்