பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

123


குரூரமாகவே பாதித்திருந்ததாக காந்தியடிகளே தெரிவிக்கிறார். தம் வீட்டில் எழுத்தராக வந்த, கிறித்தவ தாழ்ந்த சாதி இளைஞனின் கழிப்பறைச் சட்டியை எடுத்து, கஸ்துாரிபாவே சுத்தம் செய்ய வேண்டும் என்று விதித்திருந்தார்.

வழிவழியாகத் தம் பண்பாட்டில் ஓடிய தீண்டாமை மரபு, கஸ்துரிபாவுக்கு அதைச் செய்வதற்கு இடம் கொடுக்கவில்லை. இவர் செய்ய மறுத்தால், அவரே அதைச் செய்ய முற்படுவார். அதற்கும் அவருடைய ‘பத்தினி தருமம்’ இடம் கொடுக்கவில்லை. எனவே, முகக் கடுப்புடன் அவர் அந்தச் சட்டியுடன் மாடிப்படியில் இறங்கி வந்தபோது, காந்தியடிகளால் பொறுக்க முடியவில்லை. அவளே, இந்தப் பணியைச் செய்ய வேண்டும்; மனமொப்பி முகம் கடுக்காமல் மலர்ச்சியுடன் செய்ய வேண்டும். இது கணவனின் ஆணை போன்ற எதிர்பார்ப்பு.

‘முகத்தைக் கடுத்துக் கொண்டு... தீண்டாமை பாராட்டும் மனைவி’

‘இப்படி ஒரு மூடத்தனத்தை இந்த வீட்டில் என்னால் பொறுக்க முடியாது!’ என்று காந்தியடிகள் கத்தினார். கஸ்துரிபாவும் ஆத்திரத்துடன், ‘உங்கள் வீட்டை நீங்களே வைத்துக் கொண்டு என்னைத் தொலைத்து விடுங்கள்’ என்று பதிலுக்குக் கத்தினார்.

அப்போது அவர் என்ன செய்தார்?

கோபத்துடன் மனைவியின் கையைப் பற்றித் தரதர வென்று இழுத்துச் சென்று வாயிற் கதவைத் திறந்து வெளியே தள்ளி விட்டார்.

கஸ்துரிபாய்க்குத் துயரம் தாளாமல் கண்ணீர் பெருகியது. அதோடு அவள் உணர்வுகள் சொற்களாக வெடித்துச் சிதறின.