பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை


குமரியாக அன்புத் தந்தையுடன் ஐரோப்பிய நாடெங்கும் பயணம் செய்தவள் இந்திரா. அநேகமாக நேருவுடன் உலகத் தலைவர்களுக்கெல்லாம் அவர் மகள் இந்திராவும் பரிசயமானவள். உலக அரசியல் நிலவரங்களை அவருடன் நிழலாக இருந்து உணர்ந்திருந்தாள். எனவே தந்தை சுதந்திர பாரதத்தின் பிரதமர் என்ற அரசியல் மதிப்புடன் வாழ்க்கையின் மிக முக்கியமான செயலாற்றும் பருவத்தில் மகள் இந்திரா. அவருக்கு உற்ற துணையாக, வீட்டு நிர்வாகியாக, செயலாற்றும் மேலாளராக பொறுப்பு ஏற்றார். இதற்கு ‘அரசு’முத்திரை பெற்ற சான்றொன்றும் கிடையாது. ஆனால் அதுவாக, அந்தப் பொறுப்பு இசைந்து போயிற்று. இந்த முக்கியமான பொறுப்புடன் சேர்ந்த செல்வாக்கில் கணவன், குழந்தைகள், தனக்கென்ற குடும்பம் - சின்னஞ்சிறு உலகமான அதன் தலைவி என்ற இலக்குகள் பொலி விழந்தன; தேய்ந்தன.

குழந்தைகள் தந்தையின் அருகாமையில் இருக்க வேண்டும் என்று இந்திரா வாரந்தோறும் அவர்களுடன் லக்னெளவுக்கு வந்து சென்றது எந்த விதத்திலும் நன்மை பயப்பதாக இல்லை. ஃபெரோஸ், லக்னெள பத்திரிகைப் பணியை விட்டுவிட்டு, டெல்லி பிரதம மந்திரி மாளிகையில் ‘வீட்டு மாப்பிள்ளை’ என்று தங்குவதற்குச் சிறிதும் விரும்பவில்லை. நேரு குடும்பத்தின், செல்வ, செல்வாக்கு, மேலாண்மைகளைக் கிண்டலாகவும் குத்தலாகவும் பேசுவதும், அலட்சியமாக நடப்பதுமே இந்த மருமகனுக்குப் பொழுது போக்காக இருந்ததென்றே கூறலாம். என்றாலும், அன்பு மனைவியை அதற்காக நோகச் செய்வதையும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை.

“நீ குழந்தைகளுடன் வாரா வாரம் டெல்லிக்கும் லக்னெளவுக்குமாக அலைய வேண்டாம். நானே டெல்லிக்குப் பெயர்ந்து விடுகிறேன்” என்றான் அந்தக் கணவன்.