பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

93


படைத்தாள். “மாங்கனி அதிகச்சுவையாக இருக்கிறது. இன்னொரு பழத்தையும் போடு” என்றான் கணவன்.

இந்த இடத்தில், சிவனடியாருக்குப் படைத்த உண்மையை அவள் கணவனிடம் தெரிவித்திருக்கலாம். கணவன் அதை ஆமோதிக்க மாட்டான் என்ற அச்சம் இவளை அலைக்கழிப்பானேன்?

ஒரு கால் அவன் சமணம் சார்ந்தவனோ? இல்லையேல் எந்த ஒரு சிறு காரியமும் கணவன் சொற் கேளாமல் அவள் செய்யலாகாது என்ற உறுத்தலோ?

மனைவி கணவனின் அநுமதியில்லாமல் சிவனடி யாருக்கு உணவு படைத்தது தண்டனைக்குரிய குற்றமோ?

எப்படியோ-பேதை நடுநடுங்கிப் போனாள்.

எனவே, அஞ்சிய புனிதவதி, சமையலறையில் இருந்த படியே, சிவனைத் தொழுது இறைஞ்சினாள். அவள் கையில் அற்புதமாய் அதே போல் ஒரு மாங்கனி கிடைத்தது. அதைக் கொண்டு வந்து கணவனுக்குப் பரிமாறினாள். கணவன் அதை உண்டான். அத்துடன் பிரச்னை தீர்ந்துவிட வேண்டுமே? தீரவில்லை.

“இரண்டும் ஒரே மரத்துக் கனிகள்தாமே? இது மட்டும் எப்படி இவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கிறது? நான் அனுப்பிய கனியா இது?” என்று கேட்டு விட்டான்.

இளம் மனைவி நடு நடுங்கி உண்மையைக் கூறி விட்டாள். அவனால் நம்ப முடியவில்லை. ஆச்சரியப்பட்டு, “அப்படியா? நீ இப்போது, அது போல் இன்னொரு பழம் வரவழை பார்க்கிறேன்!” என்றான். அவள் கண்ணிர் மல்க, சிவனைத் தொழுது வேண்டினாள். ஆச்சரியமாய் அவள் கையில் ஒரு கனி வந்தது. அதை அவன் கையில் கொடுத்தாள். ஆனால்... அவன் கையில் விழுமுன் அது மறைந்து போயிற்று!