பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வர்கள். சாங்கியவர்கள் ‘பிரக்ருதி பிரதானம்’ என்ற கொள்கையுடையவர்கள். பிரக்ருதி என்ற பொருளில் இருந்துதான் அதன் இயக்க வளர்ச்சியால் புத்தி, சித்தம் முதலிய மனம் தொடர்பான இயல்புகள் தோன்றின என்று சாங்கியவாதிகள் நம்பினார்கள். அவர்களுடைய பண்டைத் தத்துவத்தில் படைப்பாளி என்ற கடவுளுக்கு இடம் கிடையாது. பொருளின் இயற்கையால்தான் உலகம் இயங்கி பரிணாம மாற்றம் அடைகிறது என்ற கருத்துத்தான் இருந்தது. இக்கொள்கைக்கு கடவுள் இல்லாத சாங்கியம் என்று பிற்கால ‘கடவுள் உண்டு’ என்று கூறிய தத்துவவாதிகள் பெயரிட்டழைத்தனர். அவர்கள் சாங்கியத்தில் கடவுளைப் புகுத்தி யேஸ்வரசாங்கியம் (கடவுளோடு கூடிய சாங்கியம்) என்றவோர் தத்துவத்தைப் படைத்தார்கள். பழமையான (பூர்வ) சாங்கியத்தில் கடவுள் கருத்து இல்லை. ஒரு தற்காலத் தத்துவாசிரியர் கூறுகிறார்: “புற உலகும், அக உலகும், பிரக்ருதி (பொருள்) என்ற வஸ்துவின் பரிணாம வளர்ச்சியின் விளைவுகளாகும். இச்செயல் தொடருக்கு பிரக்ருதிக்கு வெளியேயுள்ள எந்த சக்தியும் தேவை இல்லை.” எனவே சாங்கியம் பொருள் முதல்வாத அடிப்படையில் நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்டிருந்தது.

பண்டைய மீமாம்சகர்கள் இந்திய ஆன்மீகவாதத்தின் பரம விரோதிகள். பூர்வ மீமாம்சகர்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களை ஆதரிப்பவர்கள். இவை இனக்குழு சமுதாயத்தில் தோன்றிய மந்திர, மதச்சடங்குகள், மதச்சடங்குகளில் பல்வேறு தேவர்களை அவர்கள் வழிபட்டார்கள். ஒவ்வொரு யக்ஞத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு. அவர்கள் அக்னி, வருணன், இந்திரன், வசுக்கள், வாயு முதலிய இயற்கைச் சக்திகள். இச்சக்திகளை மனித உருவம் கொடுத்து, படிமங்கள் இன்றியே அவர்கள் வழிபட்டார்கள். ‘ஒருவனே தேவன்’ என்ற கடவுள் கொள்கை அவர்களுடைய சிந்தனையில் இல்லை. பிற்காலத்தில் இனக்குழுக்கள் அழிக்கப்பட்டு, அரசுகள் தோற்றம்

8