உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 37

வேத வளர்ச்சி என்கிறார்களே? வேதங்கள் என்றால் என்ன?
வேதங்கள் எல்லாம் பன்னெடுங் காலத்திற்கு முன்னாலே கங்கைக் கரையிலே வேதமொழி பேசிய மக்களினுடைய பாடல்கள்தாம். அந்த மொழியிலிருந்து வளர்ச்சி பெற்றதுதான் சமஸ்கிருதம் (திருந்திய மொழி) எனப்படும் வடமொழியாகும் வேதமொழி என்பது வடமொழிக்கு முந்திய மொழி ஆகும். ரிக்வேதம் என்பது முழுவதும் பாடல்களால் ஆனது. இந்தப் பாடல்கள் எல்லாமே பல்வேறு வகையான தெய்வங்களை அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல (He- 'notheism) குறிக்கும். வருகின்ற இரவு போகின்ற இரவு, வைகறை குறித்த பாடல்களாக அவை உள்ளன. உஷா என்றால் விடியல் காலத்திற்குரிய தேவதை. நிஷா என்பவள் இரவின் தேவதை. அருணன் என்பது சூரிய உதயத்திற்கு முந்திய விடிகாலையின் தேவதை.
இப்படி நிறையத் தெய்வங்களைப் பாடுகிற பாடல்கள் ரிக் (இருக்கு) வேதத்திலே உண்டு. அந்த காலத்தில் வேள்விக்குரிய தெய்வங்களாக அவை இருந்தன. அவற்றுக்கு மண்ணுலகில் உருவம் கிடையாது. இந்திரன், மருத் (காற்று) ஆகியவை போல்வன அந்தத் தெய்வங்கள். அக்னி மட்டும் பூமியில் இருக்கும் அதற்கும் 'அக்னி தேவன்' என்று தனியாக மந்திரத்தில் பெயர் வைத்துக் கொள்வார்களே தவிர, பூமியிலே மற்ற மூன்று தெய்வங்களுக்கும் உருவம் அந்தக் காலத்திலே கிடையாது. இந்தக் காலத்திலும் கிடையாது. யஜூர்வேதம் என்பது, வேதக் கிரியைகளை எவ்வாறு செய்வது என்று சொல்லக்கூடிய குறிப்புகளின் தொகுதியாகும்.
'சாமவேதம்' என்பது இசைப்பாடல்களால் ஆனது. 'சாமகானம்'. என்பார்களே அதெல்லாம் (சாம வேதம்) இசை வேதம் ஆகும். அதர்வண வேதம் ஒரு காலத்திலே கிடையாது. பின்னாலே அதர்வண வேதம் என்பது நாட்டார் மந்திரங்கள் (Witch Craft) என்று சொல்லக்கூடிய செய்வினை செய்வதைக் கூறும் மந்திரங்கள் அடங்கிய தொகுப்பு ஆகும்.
மற்ற மக்கள், தொகுதியின் நம்பிக்கைகளை உள்வாங்கிக் கொண்டு வேறு மூன்று வேதங்கள் என்பதுதான் பழைய வழக்கு. பின்னாளில் வழியில்லாமல் நாலாவது வேதத்தை உருவாக்கினார்கள். அதற்குப் பின்னாலே யஜூர் வேதத்தினை இரண்டாகப் பிரித்து (உபகர்மா என்று வடமொழியிலே பெரிதாகச் சொல்வார்கள்) அதாவது செய்யக்கூடிய சடங்குகள் சாதிவாரியாக வித்தியாசப்படும் என்பதனாலே கிருஷ்ண யஜூர் வேதம், சுக்ல யஜூர் வேதம் என்று-இவர்கள் தனியாகப் பிரித்து வைத்துக் கொண்டார்கள் (சுக்ல என்பது சிவந்த நிறமுடைய ஆரியப் பார்ப்பனர்களையும் கிருஷ்ண என்பது கறுத்த நிறமுடைய மற்றவர்களையும் குறிக்கும்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/38&oldid=1677652" இலிருந்து மீள்விக்கப்பட்டது