உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 67

திராவிட இயக்க முன்னோடிகள் 'திராவிட தேசியம்' என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தனர். நடைமுறையில் அது தமிழ் தேசியமாகவே அமைந்ததை 1930களில் காண்கிறோம். தமிழர்கள் தங்கள் சுய அடையாளம் தேடும் முயற்சிகளில் ஒன்றாகவே மொழிவழி ஏகாதிபத்தியத்தை இனங்கண்டு கொண்ட பெரியார் 1926இல் இந்துஸ்தானி தேசிய பாஷையா? என்ற முதல் இந்தி எதிர்ப்புக் கட்டுரையை எழுதுகிறார்.
கடவுள் நம்பிக்கை உடைய தமிழ் அறிவாளிகள் 1930களின் தொடக்கத்தில் · பெரியாரிடமிருந்து விலகியே நின்றனர். குடி அரசு இதழில் பொது உடைமைக் கருத்துகளும் இந்தி எதிர்ப்புக் கட்டுரைகளும் வெளிவந்தன.
1932-33இல் சிங்காரவேலர், அ.இராகவன், மயிலை சீனி.வேங்கடசாமி போன்றோர்களே இக்கட்டுரைகளை எழுதினர். அ.இராகவன் 'தமிழ்ப் பண்டிதர்களே இன்னும் தூக்கமா?' என்று கேட்டு, தமிழ் மொழியின் மேன்மை பற்றி 50 பக்கத்தில் புத்தகம் போட்டு 2 ரூபாய்க்கு விற்கும் தமிழ்ப் புலவர்களைச் சாடிவிட்டு. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு “அடிகளும், முதலியாரும் பிள்ளையும் நாட்டாரும் முன்வரப் போகிறார்களா இல்லையா?" என்றெழுதினார்.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்றழைக்கப்பட்ட சிங்காரவேலரின் இந்தி எதிர்ப்புக் குரலுக்கு, அன்றைக்கு தமிழ் நாட்டிலிருந்த பொதுவுடைமை இயக்கத்தினர் கேளாக்காதினராக முகம் திருப்பிக் கொண்டார்கள். இன்றுவரை அப்படித்தான்.
1937இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்ப்புலவர்கள், பிற அறிவாளிகள், பொதுமக்கள் ஆகியோர் ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்தப் பெற்றது. 9 தளபதிகள் (சர்வாதிகாரிகள்) இதற்கென நியமிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் பார்ப்பனர் (காஞ்சிபுரம் பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார்) ஈழத்து அடிகள் என அறியப்பட்ட ஈழத்துச் சிவானந்த அடிகளும் இதில் பங்கு பெற்றார். திராவிட இயக்கத்துக்கு ஒரு விரிந்த மக்கள் தளத்தைப் பெற்றுத் தந்தது 1937 ‘இந்தி எதிர்ப்புப் போராட்டமே ஆகும்.
தமிழ் மக்களுக்குத் தமிழ்மொழி பற்றிய தன்னுணர்ச்சி ஊட்டுவதில் 1930களில் திராவிட இயக்கம் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது என்றால், வேறொரு வகையில் அனைத்திந்திய தேசியம், திராவிட இயக்கத்தின் மீது வெற்றி பெற்றது. அயோத்திதாசப் பண்டிதர் காலம் முதல் 30 ஆண்டுக்காலமாக திராவிட இயக்கத்தோடு தலித் மக்கள் கொண்டிருந்த உறவு மிக நெருக்கமானது. ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, மீனாம்பாள் சிவராஜ், எஸ்.பி.ஐ.பாலகுலசிங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/68&oldid=1703890" இலிருந்து மீள்விக்கப்பட்டது