பக்கம்:இன்னொரு உரிமை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுமைதாங்கிகள்159


“சும்மா நிறுத்துங்கப்பா... ஆரம்பகாலத்திலேயிருந்தே சித்தப்பாவுக்கும் அத்தைக்கும் எங்கம்மா செய்த பணி விடையை, அவங்க சேவையா நினைக்காமல் வேலைக்காரத் தனமாய் நினைக்கும்படியா நீங்க நடந்துக்கிட்டீங்க. அவங்க முன்னாலேயே இந்த அப்பாவியை இந்த ‘தெரே சாவை’ விரட்டி விரட்டி அவங்க மனசுல தங்களுக்கு இவள் சேவை செய்யுறது, நாய் வாலை ஆட்டுறதுமாதிரி ஒரு சாதாரண காரியம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தினீங்க. இதனால வீட்டுநாயான இவள்தான் நன்றியோட இருக்கணும். நாம நன்றியோட இருக்க வேண்டியதில்ல என்ற எண்ணத்தை அவங்ககிட்டே ஏற்படுத்தினீங்க. நீங்க கணவனா நடந்துகிறதுக்குப் பதிலாய், ஒரு ஆணாய்தான் நடந்துகிட்டிங்க! நான் இப்போ மகள் என்கிற முறையில் பேசாமல் ஒரு பெண் என்கிற முறையில் சொல்றேன். படித்து வேலைக்குப் போய் சொந்தக்காலில் நிற்கும்வரை எனக்கு எந்தக் கல்யாண சொந்தமும் தேவையில்ல!”

தந்தை தத்தளித்தார். மகளைப்பற்றி அவருக்குத் தெரியும். பிடித்தால் ஒரே பிடிதான். அவர் மனைவியை எங்கோ தொலைந்துபோனவள்போல் தன்னைத்தானே தேடிக்கொண்டிருப்பவள் போல் தோன்றிய சுலோச்சனாவை―கண்களால் கெஞ்சினார். யாசகக் குரலில் கேட்டார்:

“சுலோ... உன் மகள்கிட்ட சொல்லுடி! நல்ல இடம்டி! புத்தி சொல்லுடி!”

சுலோச்சனா வாயில் புடவையை இழுத்துச் சுற்றினாள். நொய்ந்துபோன உடம்பை நிமிர்த்தினாள். அவரை வழக்கத்திற்கு மாறாக, நேருக்கு நேராய்ப் பார்த்து அடுத்த பேச்சுக்கு அவசியம் இல்லை என்பதைப்போல் அதட்டலாகப் பதிலளித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/168&oldid=1368654" இலிருந்து மீள்விக்கப்பட்டது