பக்கம்:இன்னொரு உரிமை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176சு. சமுத்திரம்


மூச்சை முன்னும் பின்னும் விட்டுக்கொண்டே, “போன விஷயம் என்னாச்சு?” என்றாள் லட்சுமி. ‘மேக்கப்’ போடு பேச விரும்பாதவர்போல் சின்னச்சாமி செருப்புக்களைக் கழற்றிப் போட்டுவிட்டு கிழிந்துபோன ஒரு நாலுமுழ வேட்டியைக் கட்டிக்கொண்டபிறகு மனைவியைப் பார்த்து “கொஞ்சம் தண்ணி தா” என்றார் நிதானமாக. லட்சுமிக்கு குடத்தை இறக்கிவைக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

“போன விஷயம் என்னாச்சி? அதச் சொல்லும் முதலுல!”

“நீ முதல்ல தண்ணி தாப்பா...”

“மாடுகூட இந்த வேளையில தண்ணி குடிக்காது. உமக்குத் தாகம் எங்கிருந்துதான் வருதோ...அது சரி, போன விஷயம் என்னாச்சி?”

சின்னச்சாமி அவளிடம் பேசவில்லை. நேராக சமையலறைக்குள் போய் செப்புக்குடத்திற்குள் ஒரு செம்பைவிட்டு உலுக்கி, வாய்க்குக் கொண்டு வந்தார்.

“போன விஷயம் என்னாச்சி?”

“அநேகமாய்ப் பழந்தான்.”

“அப்படியா, பையனுக்கு என்ன வேலையாம்? சொத்து இருக்கா? சுகம் இருக்கா? சொல்லுமே சீக்கிரமா!”

“பையன் செக்கச் செவேன்னு ராஜா வீட்டுக் கண்ணுக் குட்டிமாதிரி இருக்கான் ரெவின்யூ இன்ஸ்பெக்டரா இருக்கானாம்! வேலையில் சேர்ந்து மூணு வருஷத்துல ரெண்டு வீடு கட்டிட்டான் கெட்டிக்காரன்!”

“ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்குச் சம்பளம் குறைவாத் தானே இருக்கும்?”― இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சின்னச்சாமி சிறிது நேரம் சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/185&oldid=1369323" இலிருந்து மீள்விக்கப்பட்டது