பக்கம்:இன்னொரு உரிமை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோமதியின் கதை 17


இலக்கிய, சுகப்பிரசவ இன்பங்களைவிட அதிகமானது என்ற பெருமிதமான அனுபவத்துடனும், திருப்தியுடனும் திரும்பினேன்.“ -சு. சமுத்திரம்

முக்கடல்கள் சங்கமித்த பகுதிக்கு அருகே, அவற்றின் சங்கநாதம் விழும் காதுப்பகுதி போல் இருந்தாலும், எந்தப் பகுதியுடனும் சங்கமிக்க விரும்பாததுபோல், துண்டித்த தாய், துண்டிக்கப்பட்டதாய் நின்ற கிராமம். நின்ற கிராமமல்ல, காகங்களின் கரவை குறட்டை ஒலியாகவும் பள்ளத் தரையைப் படுக்கையாகவும் கொண்டு கும்பகர்ணனைக் குல தெய்வமாகக் கொண்டதுபோல் படுத்துக் கிடந்த பகுதி. நிலமகளின் ஆழமான காயம்போல் நிரடு தட்டிய ஊர். மின்னொளி அங்கே பாயாத காலம். காலம் என்பதை அதன் மாறுதல்களை வைத்தே அனுமானிக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால், பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, பதினெட்டாவது நூற்றாண்டு ஆட்சி செய்ததாய் அர்த்தப்படுத்திக்கொள்ளவைக்கும் குக்கிராமம்.

சேவல்கள் கூவி முடித்துவிட்டு, கோழிகளைப் பார்த்து ஒடிய நேரம்

வீட்டில் முக்கியமான காரியங்களை வெளியே போய் நடத்தத் தீர்மானித்ததுபோல், கோமதியின் மாமியார் விட்டுச் சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு தொட்டில் சேலையை விளக்கி, பேத்தியை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டு, நடை வாசலுக்கு வந்தாள். புறக்கடையில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தாய்ப்பசுவிடம் சேர்த்துக்கொண்டிருந்த கோமதி கன்றின் கயிற்றை அவிழ்த்து விடும்போது குவிந்திருந்த விரல்களை நிமிர்த்தாமலே, மாமியாருக்குப் பின்னால் ஓடிவந் தாள். சத்தம் கேட்டுத் திரும்பிய மாமியார் பின்னோக்கித் திரும்பி, உடம்பைத் கேள்விக்குறி மாதிரி வளைத்துக்கொண்டு மருமகளைப் பார்த்தாள்.

சி-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/26&oldid=1369531" இலிருந்து மீள்விக்கப்பட்டது