உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை


நாடகம் என்பது ஒரு நாட்டின் கலையை, கலாச்சாரப் பண்பை, நாகரிக வளர்ச்சியைப் பிற நாட்டினருக்கு எடுத்துக் காட்டும் அளவுகோலாகும்.

அதுபோலவே...

நாடகம் எனப்படுவது ஒரு நாட்டில் அல்லது சமூகக் கோட்பாட்டில் இருக்கும், 'நல்லது—கெட்டது' ஆகியவற்றை விளக்கிக் காட்டுவது மட்டுமல்ல, அதற்கான பரிகாரத்தைத் தேடித் தருவதுமாகும்.

இது கலை. இந்தக் கலைக்கு, நமக்கு முன்னே வாழ்ந்த மூத்தவர்கள், 'கூத்து' என்று முடிசூட்டி முத்தமிழ் நாட்டை வலம்வரச் செய்தனர். அத்தகைய 'கூத்து' என்னும் துறையை பின்பற்றிய பின்வந்தோர், அதன் மூலமாக இனவுணர்ச்சி மங்கவும், இதிகாச புராணங்கள் தலைதூக்கவும், சுயபுத்தி சிதறவும் பெரிதும் பயன்படுத்தி வந்தனர்; அதிலே வெற்றியும் கண்டனர்.

ஆம்; மனித மனத்தைக் கவரும் சக்தி எதற்கு உண்டோ, அது கலையாகும் அந்தக் கலைக்குள் புகுத்தப்படும் கருத்து எதுவானாலும் அது மனித மனத்துக்குள் இலகுவாகப் புகுந்து, அந்தக் கருத்துக்கேற்ப நடக்கச் செய்துவிடும்.