பக்கம்:இன்ப வாழ்வு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இல் பிச்சை

ஒன்றிய அன்புடைய ஒரு தலைவனும் தலைவியும் நல்லறமாம் இல்லறத்தின் வழிநின்று வாழ்ந்து வந்தனர். ‘இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்னும் குறளின் கருத்தைத் தம் செயலால் விளக்கி மெய்ப்பிக்கலாயினர். வந்த விருந்தினரைப் பேணி, இனி வரும் விருந்தினரையும் எதிர்நோக்கி நிற்கும் இயல்புடையர் ஆயினர். இவ் விருந்தோம்பும் வாழ்க்கைக்குப் பொருள் மிகவும் தேவைப் படும் அன்றோ? அதற்காகத் திரண்ட பொருளீட்டி வர விரும்பினான் தலைவன். உள்ளக் கருத்தைத் தலைவியிடம் உரைத்தான். அவளும் இசைந்தாள். ஆனால், எஞ்ஞான்று மீண்டு வருவீர்கள் என்று ஆவலுடன் வினவினாள். அதற்கவன், வாடைக்காற்று வீசும் காலத்தில் வந்து விடுவேன் என்று பதிலிறுத்துப் பிரிந்தான். தலைவனைப் பிரிந்து தலைவி தனித்ததால், தோழியின் துணைகொண்டு ஒருவாறு காலங் கழித்து வந்தாள்.

தலைவன் குறித்துச் சென்ற நாட்களின் அளவு குறையக் குறையத் தலைவியின் துயர் பெருகியது. தோழி ஆறுதல் பல கூறித் தேற்றி வந்தாள் வாடைப் பருவம் என்று வரும் என்று வரும் என்று எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/115&oldid=550684" இலிருந்து மீள்விக்கப்பட்டது