பக்கம்:இன்ப வாழ்வு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

இன்ப வாழ்வு


குற்றாலத்துச் சிவன் தெருவில் உலா வந்து கொண்டிருக்கின்றார். அவரைக் காணக் கன்னியர் பலர் கடிதின் ஒடுகின்றனர். ஒரு பெண் ஒரு கையில் வளையல் போட்டுக் கொண்டிருந்தாள். இச் செய்தி தெரிந்ததும் மற்றொரு கைக்கு வளையல் போடுவதையும் மறந்து ஓடுகின்றாள். இன்னொரு பெண் ஆடையணிகளை இடம் மாற்றி அணிந்துகொண்டு இரைக்க இரைக்க ஓடுகின்றாள். மற்றொரு பெண் ஒரு கண்ணுக்கு மையிட்டுக் கொண்டு, மற்றொரு கண்ணுக்கு அங்கே போய் மையிட்டுக் கொள்ளலாம் என்று கையில் எடுத்துக் கொண்டு கடிய ஒடுகின்றாள். கூந்தலும் வளையலும் சோர்ந்த வேறொருத்தி, சடை தாங்கிய சிவனை நோக்கி,

“மைவளையும் குழல்சோரக்
கைவளை கொண்டான் இது என்ன
மாயமோ சடைநரித்த ஞாயமோ”

என்கின்றாள்.

இப் பெண்களை எல்லாம் அங்குள்ளார் பார்த்து நகைக்கின்றார்கள். என்ன செய்வது? ஆவலுக்கு அடிமைப் பட்டுவிட்டால் இந்நிலைதானே!

இந் நிலையில், பந்தாடிக் கொண்டிருந்த வசந்தவல்லி என்னும் தலைவியும் ஓடினாள். அங்கே தோழிமார்களின் நிலையே இப்படி என்றால் தலைவியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவ்வளவுதான்! எதிர்பார்த்திருந்த அந்தக் குற்றால நாதருடன் கூட்டியனுப்பிவிட்டாள் தன் உள்ளத்தை. உள்ளம் அவள்பால் இல்லாததால் உணவிழந்தாள், உடை சோர்ந்தாள், உறக்கம் விட்டாள். உரை தடுமாறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/79&oldid=514750" இலிருந்து மீள்விக்கப்பட்டது