உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்றும் இனியும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 அ.ச. ஞானசம்பந்தன் அன்றாடப் பிரச்சினைகளை வைத்து இன்று பல நாடகம் எழுதுகிறோம். அந்த நாடகங்கள் அந்தப் பிரச்சினை சூடாக இருக்கிறவரையில் ஒர் அளவுக்குத் திருப்தியை அளிக்கும். அதற்கப்புறம் எவ்வளவோ நாடகங்கள் பார்க்கிறோம். நந்தனார் நாடகத்திலேகூட அரசியலை விவாதிக்கிறார்கள். ஏனென்றால், அப்போதுதான் நாம் கை தட்டுகிறோம். அவர்கள் மேல் குறை சொல்லிப் பயன் இல்லை. போகிற நாம் அல்லவா கை தட்டுகிறோம். அவன் கை தட்டுக்காக ஆடுகிறான் என்று சொல்லிக் கொண்டிருப்போம். கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்பீர்களேயானால், மக்கள் பண்பாட்டினுடைய அடிப்படையை எடுத்துச் சொல்ல வந்ததுதான் நாடகம் என்பதை அறியலாம். நாடகம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றது. எனில், வாழ்க்கையின் எந்தப் பகுதியை? என்றும் உள்ளதாய் - மாறாததாய் இருக்கின்ற ஒரு பகுதியைப் பிரதிபலித்தால் அதை நாம் பார்க்கும்பொழுது அதனுடன் தொடர்பு கொள்கிறோம். அதனால்தான் காப்பியத்திலே வருகின்ற பெரிய பாத்திரங்களைப் பார்க்கும்பொழுது நம்மையே சொல்லுவதைப் போல் இருக்கின்றது. நம்மிடமும் கொஞ்சங் கொஞ்சம் அந்தப் பண்பாடுகள் இருக்கின்றன. அந்தப் பண்பாட்டை நாடகாசிரியன் தொடும்ப்ொழுது பொது நரம்பை மீட்டிவிடுகின்றான்; அதனால் நம்முள் ஒர் எதிரொலி ஏற்படுகிறது. அதை விட்டுவிட்டு அன்றைய அன்றைய பிரச்சினையைப் பேசத் தொடங்கினால் திருநெல் வேலிப் பிரச்சினை சென்னைக்குக் கிடையாது; சென்னைப் பிரச்சினை கோயம்புத்துருக்குக் கிடையாது.