பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

123




அகராதிக் கலை

அடுத்து மற்றொரு கல்வித்திட்டத்தை இங்கே குறிப்பிடாமல் விடமுடியாது. அதாவது, இந்தக் காலத்தில் ‘லெக்சிகோகிராபி’ (Lexicography) என்று சொல்லப்படும் சொற்பொருள் விளக்கம் கூறும் அகராதி (Dictionary) கலை அந்தக் காலத்தில் விரிவான முறையில் கையாளப்பட்டு வந்தது. இன்று அகராதி தேவைப்படுகிறது. சிலருக்கோ அகராதியைப் பயன்படுத்தும் விதமே தெரியாது. மெத்தப் படித்தவர்களும் இன்று அடிக்கடி அகராதியின் உதவியை நாடவேண்டிய நிலையில் உள்ளனர். அன்று, கற்றவர்களோ அகராதிப் பொருள் முழுவதையும் மனத்தில் அமைத்து வைத்திருந்தனர். அந்தக் காலத்து அகராதி நூலுக்கு ‘உரிச்சொல்’அல்லது நிகண்டு என்பது பெயர். நிகண்டு. செய்யுள் நடையில் இருக்கும். அதனால் மனப்பாடம் செய்வதற்கு மிக எளிது. ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களும் (அர்த்தங்களும்) செய்யுளாகவே சொல்லப்பட்டிருக்கும்; ஒரே பொருளுக்குரிய பல பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, கடலுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ - காட்டிற்கு எத்தனை பெயர்கள் உண்டோ - அத்தனை பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த - நிகண்டுச் செய்யுட்களை மனப்பாடம் செய்து வைத்திருப்பவர்கள், புதுப்புதுச் சொற்களையமைத்துப் பாடல்கள் படைக்கலாம்; பிறர் இயற்றியுள்ள பாடல்களுக்கும் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே பொருள் புரிந்து கொள்ளலாம். இன்றுபோல் அகராதி மூட்டையைச் சுமக்கவேண்டியதில்லை. எத்துணை நன்மை!

இப்படி உதவும் எண்ணற்ற நிகண்டு நூல்கள் தமிழில் உண்டு - இன்றும் உள்ளன. இப்போது ஆங்கிலத்தில் ‘ஆக்சுஃபோர்டு’ டிக்ழ்சனரி (Oxford Dictionary) - அந்த டிக்ழ்சனரி-இந்த டிக்ழ்சனரி என்று தம்பட்டம் அடித்துத்