பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

சுந்தர சண்முகனார்


டுள்ளன. இவற்றின் இறுதியில் உள்ள, உ, பு, ஆ, ஊ, என, அ, இன், இய, இயர் என்பன முறையே இவற்றின் விகுதிகளாகும். உ, பு, ஊ முதலிய விகுதிகளைப் போல ‘ஆ’ என்பதும் வினையெச்ச விகுதியாகும். இது, மாடுகள் மண்ணைத் தின்னா என்பதில் உள்ள தின்னா என்பதன் ஈற்றில் உள்ள ‘ஆ’ என்னும் எதிர்மறை வினைமுற்று விகுதி போன்ற தன்று. செய்யா என்றால் செய்து - விழுங்கா என்றால் விழுங்கி என்னும் பொருள் தரும் உடன்பாட்டு வினையெச்ச விகுதியாகும். செய் + பு = செய்பு, செய் + ஊ = செய்யூ என்பனபோல், செய் + ஆ = செய்யா எனக் கருத்து கொள்ளல் வேண்டும்.

செய்து என்னும் பொருளிலுள்ள செய்பு, செய்யா, செய்யூ என்பனவற்றின் இறுதியில் உள்ள பு, ஆ, ஊ என்னும் விகுதிகளே இறந்த காலம் காட்டுகின்றன. செய என்பதில் ‘அ’ விகுதி நிகழ் காலம் காட்டும். செயின், செய்யிய, செய்யியர் என்பவற்றில் உள்ள இன், இய, இயர் என்னும் விகுதிகள் எதிர் காலம் காட்டும். இவற்றுள், செய்து, செய, செயின் என்னும் வாய்பாடுகளே இன்று பெருவாரியாகப் பின்பற்றப்படுகின்றன. செய்யா, செய்யிய என்பன செய்யுளில் ஓரளவு பின்பற்றப்படுகின்றன. செய்பு, செய்யூ, செய்தென, செய்யியர் என்பன வழக்கில் அருகி விட்டன.

2-9-2 செய வாய்பாடு:- நிகழ்காலம்

‘செய’ என்னும் வாய்பாடு நிகழ் காலம் காட்டும் எனப்பட்டது. அவன் படிக்கக்கண்டேன் - என்ற இடத்தில் ‘படிக்க’ என்னும் செய வாய்பாடு நிகழ்காலம் காட்டுகிறது. காணும்போது அவன் படித்துக்கொண்டிருந்தான். அதனால் இது நிகழ்காலமாகும்.

2-9-2-1 காரணப் பொருள் - இறப்பு

நீர் பாய்ச்ச நெல் விளைந்தது என்பதில் உள்ள ‘பாய்ச்ச’ என்னும் செய வாய்பாடு, காரணப்பொருளில் உள்ள வினை