பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆசிரியர் முன்னுரை

‘இயல் தமிழ் இன்பம்’ என்னும் இந்த நூல் அரிதின் முயன்று எழுதிய ஆய்வுத் தொகுப்பு. பல்வேறு கோணங்களில் பல்வேறு பொருள்பற்றி எழுதிப்பட்டது இது.

புதுக் கவிதைகள் புறப்புடு, பழைய இலக்கிய-இலக்கணச் செய்திகளைக் காணாதடித்துவிடுமோ - தமிழின் தலையெழுத்தைத் திசை மாற்றி விடுமோ - என்ற ஐயமும் அச்சமும் ஏற்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில், பழைய இலக்கிய - இலக்கணச் செய்திகளை மீண்டும் புதுப்பித்து மக்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயக் கடமை நம்மனோர்க்கு உண்டு. அந்தக் கடமை உணர்வின் ஒரு கூறே இந்நூலின் எழுச்சி.

தாள் விலை, அச்சுக் கூலி, படச் செலவு முதலியவை வானளாவ உயர்ந்து கொண்டு போகும் இந்நாளில், தரமான கருத்துடைய பெரிய நூல்களை வெளியிடுவது என்பது அரிய செயலாயுள்ளது.

நூறு பக்கங்களுக்குள் வணிக நோக்குடன் புற்றீசல்கள் போல் புறப்பட்டு வெளியாகும் நூல்கள் மட்டும் மக்களுக்குப் போதமாட்டா. I. A. S. தேர்வில். தமிழர்களின் தரம் குறைந்துள்ளதாகக் கருதப்படும் இந்நாளில், பலதுறைச் செய்திகளைக் கூறும் இத்தகைய பெரிய நூல்கட்கு நல்லாதரவு அளிக்கத் தொடர்புடைய அனைவரையும் மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.

இந்நூல் வெளியீட்டுக்கு ஓரளவு பொருள் உதவிபுரிந்த புதுவை அரசுக்கு மிக்க நன்றி. வணக்கம்.

சுந்தர சண்முகன்
(நூலாசிரியன்)