பக்கம்:இரவு வரவில்லை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. யார் அவள்?


கோடி மதிகள்கண்டேன்
கொஞ்சு மவள்முகத்தில்!
ஓடைக் குளிர்மலர்த்தேன்-தோழனே!
உண்(டு)அவள் செவ்வுதட்டில்!
1


கையினில் வீணைகுறள்
காலிற் சிலம்புகண்டேன்!
மெய்யினில் மணிமேகலை!-தோழனே!
வெற்றிவளை தோளிற்கண்டேன்!
2


என்னைப் பிடித்தணைத்தாள்;
இதழ்சுட முத்தந்தந்தாள்!
கன்னியவள் யாரோசொல்-தோழனே!
கள்வெறி யூட்டினவள்?
3


குளத்துச்செவ் வல்லிமலர்
குலுங்கச் சிரித்ததுபோல்
களங்கமில் புன்முறுவல்-தோழனே!
கண்ணிற் பதிந்ததடா!
4


செகத்தில் உயிர்மயக்கும்
சேல்விழி மின்னல்பாய்ந்தென்
அகத்தைக் கவர்ந்ததடா-தோழனே!
அந்தி அழகொளிபோல்!
5


என்னை அவள்மயக்கில்
என்றென்றும் ஆழ்த்திவிட்டாள்!
கன்னியவள் யாரோசொல்?-தோழனே!

காணேன் விழித்தவுடன்!
6

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/64&oldid=1180143" இலிருந்து மீள்விக்கப்பட்டது