பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. ஈர்ப்பு ஆற்றல்

ஈர்ப்பு ஆற்றல் (Gravity) இன்ன தென்பதையும் அஃது இராக்கெட்டுத் துறையில் எங்ஙனம் பங்குபெறுகின்றது என்பதையும் மேலே குறிப்பிட்டோம். இதைச் சற்றுத் தெளிவாக ஈண்டு விளக்குவோம். ஈர்ப்பு ஆற்றல் இல்லையாயின் நாம் இப் பூமியில் நிலைபெற்றிருத்தல் முடியாது. கந்தருவர்கள் போல் வானத்தில் பறந்து கொண்டிருப்போம்! நாம் மட்டிலுமா? பூமியுடன் பொருத்தப்பெறாதிருக்கும் காற்று, நீர், தாமியங்கிகள், நாய்கள், மக்கள் முதலிய அனைத்தும் பூமியை விட்டு நீங்கி வானத்தில் அலைந்து திரிய நேரிடும். இன்னும் கூறப்போனால் பூமியின் நிலையும் அது தான் ; அதுவும் இப்பொழுது இயங்குவதுபோல் ஒரு. குறிப்பிட்ட அயனப் பாதையில் இயங்காமல் எங்கெங்கோ வானத்தில் நிலை கலங்கித் திரியும். ஈர்ப்பு ஆற்றல் மட்டிலும் இல்லையானால் பூமி இல்லை; சூரியன் இல்லை; சந்திரன் இல்லை. ஏன்? இந்த அகிலமே (Universe) இல்லாது போய்விடும். ஆகவே, பொருள்களிடையேயுள்ள கவரும் விசையாகிய ஈர்ப்பு ஆற்றலை நாம் பெற்றிருப்பது நமது நற்பேறு ஆகும்.

அகப்பற்று, புறப்பற்று என்ற இருவகைப் பற்றுக்களையும் நீக்கி வீடுபேற்றில் நாட்டம் செலுத்துவோர், இந்த இருவகைப் பற்றுக்களையும் நீக்குவது அவ்வளவு எளிதன்று என்பதை நன்கு உணர்வர். ஒன்றை நீக்க முயன்றால் பிறிதொன்று இறுகப் பற்றிக் கொள்வதையும் பற்றுக்கள் பஞ்சதந்திரக் கதைகள் போல் நீளுவதையும் நன்கு அறிவர். பொருள்களைப் பூமியினின்று அகற்றுவதிலும் சிரமம் உள்ளது; பூமியின் ஈர்ப்பு ஆற்றல் பொருள்களை இறுகப்