பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

ராணி மங்கம்மாள்

உடல்வலி கொன்றது. உறக்கமும் வரவில்லை. உண்பன பருகுவன எல்லாமே கசந்து வழிந்தன. எதுவும் வேண்டியிருக்கவில்லை.

மஞ்சளையும் வேப்பிலையையும் உடலில் அரைத்துப் பூசச் சொன்னார்கள் அரண்மனை வைத்தியர்கள். ராணி மங்கம்மாள் தான் ராணி என்பதை மறந்து ரங்ககிருஷ்ணனின் தாயாக மட்டுமே மாறி அவனருகே இருந்து கவனித்தாள். பணிவிடைகள் செய்ய ஓடியாடும் உடல் நிலையில் இல்லாவிட்டாலும் சின்ன முத்தம்மாளும் அருகே இருந்தாள்.

வலி தெரியாமல் இருக்க மிகப்பெரிய தலைவாழைக் குருத்து இலையில் விளக்கெண்ணெயைத் தடவி அதில் ரங்ககிருஷ்ணனைக் கிடத்த நேர்ந்தது. அவனுக்குத் தன் நினைவே இல்லை.

"வைத்தியம் செய்வதை விட விரைவில் இறங்கித் தணிந்து அருள் செய்யும்படி மாரியம்மனை வேண்டிக் கொள்வதுதான் பயன்படும் மகாராணி!" என்று வைத்தியர்கள் எல்லாரும் கூறினார்கள், ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அரண் மனையிலுள்ளவர்களும் மக்களும் "எங்கள் மன்னரைக் காப்பாற்று தாயே" என்று அம்மனைப் பிரார்த்தித்தார்கள். அரண்மனையில் கட்டிய வேப்பிலைக் கொத்துகளைப் போல் மனிதர்களின் முகங்களும் வாடித் தொங்கின, களையிழந்தன.

இன்னும் சில நாட்களில் தாயாகப் போகும் சின்ன முத்தம்மாள் ஓயாமல் கண்ணீர் சிந்தினாள். கலங்கினாள். கணவனின் உடல் ரணத்தையும் வலியையும் தான் ஏற்றுக் கொண்டு அவனை வலியிலிருந்தும் ரணத்திலிருந்தும் மீட்க முடியவில்லையே என்று மனமுருகினாள் அவள்.

இராப்பகலாக மகனின் அருகிலேயே இருந்த மங்கம்மாள் அரையுடலாகத் தேய்ந்து போனாள். கோயில்களில் விசேஷ அர்ச்சனைகள் செய்யப்பட்டன. அம்மை இறங்கவும், தணியவும் எல்லா அம்மன் கோயில்களுக்கும் வேண்டுதல்களும், காணிக்கை களும் நேர்ந்து கொண்டாள். ராணி மங்கம்மாள் தன் வாழ்நாளிலேயே