பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

103

களுக்கும் ஈடுகொடுத்துப் பழகியிருந்த ராணி மங்கம்மாளே உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தாள். மனம் மறுகி அலமந்தாள்; அயர்ந்துபோனாள். அப்போது சின்ன முத்தம்மாளின் துயரவெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காவது தான் தனது உணர்வுகளை முதலில் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று எண்ணினாள், எல்லாரையும் போலத் தானும் அழுது புலம்பித் திகைத்து நிற்பது தன் எதிரிகளுக்கு மகிழ்வூட்டக் கூடிய காரியம் என்று அவளுக்கே தோன்றியது. ஆனாலும் தாய்ப் பாசம் அவ்வளவு சுலபமாக அடங்கிவிடக் கூடியதாயில்லை.

எதிர் காலத்தில் நாயக்க வம்சத்தின் நம்பிக்கைகளை எல்லாம் கொன்றுவிட்டு மாண்டு போயிருந்தான் ரங்ககிருஷ்ணன். தன்னுடைய ஆட்சிக்கும், அரசியலுக்கும் இனிமேல் தான் சோதனைக் காலம் தொடங்குகிறது என்பது ராணி மங்கம்மாளுக்குப் புரிந்தது.

விரோதங்களும், பொறாமைகளும் ஒரு பக்கம் இருந்தாலும், கிழவன் சேதுபதி உட்பட எல்லா அக்கம் பக்கத்து அரசர்களும் துக்கம் விசாரிக்க வந்துபோனார்கள். துக்கம் விசாரிக்கத்தான் வந்தார்களா அல்லது தான் எந்த அளவு சோகமிகுதியால் பலவீனப்பட்டுப் போயிருக்கிறோம் என்று நேரில் பார்த்துவிட்டுப் போக அவர்கள் வந்தார்களா என்னும் அந்தரங்கமான சந்தேகம்கூட ராணி மங்கம்மாளுக்கு இருந்தது. அந்தச் சந்தேகத்தில் ஓரளவு உண்மை இல்லாமலும் போகவில்லை.

ரங்ககிருஷ்ணன் சடலத்தை அரண்மனை எல்லையிலிருந்து மயானத்திற்காக எடுப்பதற்கு முன் முத்தம்மாளின் பிடிவாதம் எல்லை மீறியது. அவன் உடல் மீது விழுந்து புரண்டு கதறியழுது தன்னையும் அவனோடு சேர்ந்து எரித்துவிடும்படி மீண்டும் முரண்டு பிடித்தாள் சின்னமுத்தம்மாள். பணிப் பெண்களின் உதவியோடு ராணி மங்கம்மாள் சின்ன முத்தம்மாளைத் தனியே பிரித்து அழைத்துச் சென்று அவளிடம் பேசினாள்:

"உன் துயரத்தைவிட என் துயரம் பலமடங்கு பெரியது முத்தம்மா! மகன் இறந்த உடனேயே என் உயிரும் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பல்லைக் கடித்துக் கொண்டாவது

ரா-7