பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

107

அலைகிற தண்ணீர் ஒருநாள் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாக மாறிப் பேரும் புகழும் பெற்றுக் கடலை அடையும் தகுதியைப் பெறும் என்பதுதான் நியதி" என்று சிறுவயதில் தன் தந்தை தன்னிடம் கூறிய சொற்களை இப்போது மறுபடி எண்ணிப் பார்த்தாள் ராணி மங்கம்மாள்.

சின்ன முத்தம்மாளுக்குப் பிறக்கப்போகிற குழந்தை ஆணாக இருக்குமா பெண்ணாக இருக்குமா என்று சிந்தித்தாள் அவள். நாயக்க வம்சம் தொடர்ந்து நிலைத்து நீடிக்குமா என்பதே சின்ன முத்தம்மாளுக்குப் பிறக்கப் போகிற குழந்தையைப் பொறுத்து இருந்தது பிறக்கப்போகிற குழந்தை ஆணாக இருந்தால் கூட இன்னும் பல ஆண்டுகளுக்கு அதாவது அந்த ஆண்குழந்தை வளர்ந்து பெரிதாகிறவரை தான் ஆட்சிச் சுமையைக் கட்டிக்காக்க வேண்டியிருக்கும் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. பிறக்கப் போகிற குழந்தையும் பெண்ணாக இருந்து விட்டாலோ அப்புறம் நெடுநாட்களுக்கு விடிவே இல்லை என்று தோன்றியது.

"ரங்கா என்னையும் என் வம்சத்தையும் ஏமாற்றி விடாதே! எங்கள் குலம் விளங்க ஒரு செல்வனை அளித்துக் காப்பாற்று" என்று பெருமாளை அவள் வேண்டிக்கொள்ளாத நாளில்லை. விரத்தியில் பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்துகொண்டு விடப் போகிறாளே என்ற பயத்தில் சின்னமுத்தம்மாளைக் கட்டுக்காவலில் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் யாராவது பணிப்பெண்கள் அவளுடன் கூடவே இருந்தார்கள். துணைக்கு இருப்பதுபோல் உடனிருந்து, அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார்கள். கணவன் இறக்கும்போதே அவள் நிறை மாதக் கர்ப்பிணி, மனக்கவலைகள், குழப்பங்களில் நாட்கள் நகர்ந்தன.

ராணிமங்கம்மாள் அரங்கநாதப் பெருமானை வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை. சில நாட்களிலேயே சின்ன முத்தம்மாள் அழகிய ஆண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். ராணி மங்கம்மாளுக்குப் பேரன் பிறந்தான். வம்சம் விளங்கி வளர வழி பிறந்தது என்று தெய்வங்களுக்கு நன்றி விசுவாசத்தோடு வணக்கம் செலுத்தினாள் அவள்.