பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

113

கூர்ந்து கவனித்தாள். பின்னர் ஏதோ யோசனையிலாழ்ந்து பேசாமல் இருந்தாள். சிறிது நேரம் கழித்துச் சின்ன முத்தம்மாளே அந்தப் பணிப்பெண்ணிடம் மீண்டும் தானே பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். பணிப்பெண்ணுக்கு இப்படிச் சின்ன முத்தம்மாள் வலுவில் பேச முன்வந்தது வியப்பை அளித்தாலும் அதை அடக்கிக் கொண்டாள்.

"குடிக்கக் கூடாதென்றால் பின் எதற்காக இந்தப் பன்னீரை இங்கே நிரப்பி வைத்திருக்கிறீர்களாம்?"

"தலைநீராடலுக்காக இதை நிரப்பி வைத்திருக்கிறார்கள் அம்மா உள்ளுக்குப் பருகினால் தான் கெடுதலேயன்றித் தாய்மைப்பேற்றுக்குப் பின் பன்னீரில் நீராடினால் இதமாக இருக்கும்."

"உள்ளுக்குப் பருகினால் ஒரு கெடுதலும் இருக்காது. சும்மா நீயாக என்னைப் பயமுறுத்துகிறாய்!"

"ஐயையோ நீங்கள் அப்படி நினைக்காதீர்கள் உள்ளுக்குப் பருகினால் மோசம் போய்விடும்..."

"அடி போடி! நீங்களும் உங்கள் வைத்திய முறைகளும் விநோதமாகத்தான் இருக்கின்றன. சாக வேண்டியவர்களை எதையாவது மருந்து கொடுத்து வாழ வைக்கிறீர்கள்! வாழ வேண்டியவர்களை எதையாவது கொடுத்துச் சாகவிட்டு விடுகிறீர்கள். உங்களுக்குச்சாக வைக்கவும் சரியாகத் தெரியாது. வாழ வைக்கவும் துப்பில்லை வைத்தியமாம் வைத்தியம்!"

பணிப்பெண் இதற்கு மறுமொழி கூறாமல் சிரித்துக் கொண்டு பேசமால் இருந்து விட்டாள். எதற்காகச் சின்ன முத்தம்மாள் இப்படியெல்லாம் பேசுகிறாள் என்பதையும் அந்தப் பணிப் பெண்ணால் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்றிரவு முதல் யாமம். சின்ன முத்தம்மாளின் அறை நிசப்தமாயிருந்தது. பணிப்பெண்கள் கூடப் பகலெல்லாம் உழைத்த அலுப்பில் களைத்து உறங்கிப் போயிருந்தார்கள். மங்கலாகவும் தணிவாகவும் எரிந்த குத்து விளக்கை மேலும் தணிவாக்கி இருள்

ரா-8