பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

ராணி மங்கம்மாள்

படையெடுக்கலாம் என்றால், சேதுபதி விஷயத்தில் சிறிதும் அவசரப்படக்கூடாது" என்று இராயசமும் பிரதானிகளும் எச்சரித்தனர். பழைய உதாரணங்களை எடுத்துக் காட்டினர்.

சொல்லியனுப்பியபடி சில நாட்களில் சேதுபதி மதுரைக்கு வந்தார். ஆலவாயண்ணலையும் அங்கயற்கண்ணம்மையையும் தரிசனம் செய்து மகிழ்ந்தார். பின்பு தன் பரிவாரங்கள் படைசூழ ஒரு பேரரசன் மற்றொரு பேரரசியைச் சந்திப்பதுபோல வந்து ராணி மங்கம்மாளைச் சந்தித்தார்.

அப்போது ராணி மங்கம்மாளோடு இராயசமும், பிரதானிகளும் உடனிருந்தனர். சேதுபதி வழக்கம்போல் பழகினார் எனினும் அதில் ராஜதந்திரம் இருந்தது. அழுத்தம் இருந்தது. பணிவதுபோல் பணியாமை இருந்தது.

மதுரை நாட்டுக்குத் தான் எந்தவிதத்திலும் கட்டுப்பட்டிருப்பதாகவோ, திறைப்பணம் செலுத்தவேண்டிய கடமை இருப்பதாகவோ காட்டிக் கொள்ளாமல் உரையாடினார் அவர்.

"மீனாட்சியையும் சொக்கரையும் தரிசித்து அதிக நாளாயிற்று அம்மா தரிசித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."

"இந்த வயதான காலத்தில் இப்படிப் பிரயாணங்கள் உங்களுக்கு ஒத்துக்கொள்கிறதா?"

"உங்களைப்போல் யாராவது இப்படி நினைவூட்டிப் பேசினால்தான் எனக்கு வயதாகியிருப்பதே தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை என் வயதே எனக்கு நினைவிருப்பதில்லை."

"வயது ஒன்றுதானா? உங்களுக்குப் பல விஷயங்கள் மறந்து விடுகின்றன. நினைவிருப்பதில்லை......"

"எனக்கா? நான் சிலவற்றை மறப்பதில்லை; சிலவற்றை நினைப்பதே இல்லை. நினைப்பதும் மறப்பதும் என்னை மீறி எனக்குள் நடக்காது."

கிழவன் சேதுபதியின் பதிலில் உறுதியும், உரமும், உள்ளடங்கிய ஆத்திரமும் ஒலித்தன. எப்படி முயன்றும் தன்