பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

149

கலகமும் அருகிலேயே உடனிருக்கும் தொல்லைகளுமே அவனை அவனது எதிரிகள் முன் வலுவிழக்கச் செய்திருந்தன.

இந்தச் சூழ்நிலை மங்கம்மாளுக்குச் சாதகமாயிருந்தது. எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள் அமைச்சர்கள் என்ற முறையில் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்தனர். ரவிவர்மனை எதிர்க்கும்போது மட்டும் ஒருவிதச் செயற்கையான ஒற்றுமை நிலவியது அவர்களிடையே, அரசனும் வலுவிழந்து போயிருந்தான். அவனை ஆட்டிப் படைத்த அமைச்சர்களும் ஒற்றுமை குலைந்து திரிந்தனர். இதனால் 'பாண்டிப்படை' என அவர்களால் அழைக்கப்பட்ட மதுரைப்படை எப்போது படை எடுத்து வந்தாலும் அதற்குக் கொண்டாட்டமாயிருந்தது. திருவாங்கூர் மக்களைக் கொள்ளையடிக்கவும் சூறையாடவும் முடிந்தது.

பாண்டிப்படை வீரர்கள் ராணி மங்கம்மாளுக்குக் கிடைக்க வேண்டிய திறைப்பணத்தையும் வாங்கினர். தங்களுக்கு வேண்டியதையும் அபகரித்து மகிழ்ந்தனர். நீண்டகாலமாக இப்படியே நடந்து வந்தது. திருவாங்கூருக்குப் படை எடுப்பு என்றாலே வீரர்கள் மகிழ்ச்சியால் துள்ளினர்.

இப்படி ஆட்சிச் சூழ்நிலையினாலும் எல்லைப்புறச் சிக்கல் களாலும் ராணிமங்கம்மாள் மதுரை நகரிலும், திரிசிரபுரத்திலுமாக மாறி மாறி இருந்து வந்தாள்.

சில ஆண்டுகளுக்குப் பின் இதே போலத் திருவாங்கூருக்கு அனுப்பிய மதுரைப் படைகள் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள நேர்ந்து விட்டது. பாண்டிப்படை வீரர்கள் திருவாங்கூருக்குப் போகிறார்கள் என்றால் எந்தவிதமான தொல்லையுமில்லாமல் வெற்றியோடும் திறைப் பணத்தோடும் திரும்புகிறார்கள் என்றிருந்த நிலைமை திடீரென்று மாறியது. மதுரைப் படைகள் கல்குளம் என்னும் தலைநகர எல்லையை அடைகிற வரை எந்தத் திருவாங்கூர்ப் படை வீரனும் எதிர்க்கவரவில்லை. ஒவ்வொரு முறையும் பேருக்காவது சிறிது எதிர்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பும் திருவாங்கூர் அரசின் எல்லையைப் படைகள் அடைந்தவுடனேயே இருக்கும். இந்தத் தடவை