பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

155

படைகளை அனுப்புமுன் நரசப்பய்யாவிடம் வீர முழக்கமிட்டாள் ராணி மங்கம்மாள். படைகள் நரசப்பய்யாவின் தலைமையில் திரிசிரபுரத்திலிருந்து தெற்கே புயலெனப் பாய்ந்து புறப்பட்டன.

நம்பிக்கைத் துரோகத்தை எதிர்த்து இரவு பகல் பாராது ராணி மங்கம்மாள் நடத்திய ஆலோசனையால் எதிர்பாராத அபவாதம் ஒன்று மெல்ல மெல்லப் புகைந்தது. ராணி அதைப் பொருட்படுத்தவோ பெரிதுபடுத்தவோ விரும்பவில்லை. ஆனால் வாய்ப்புக் கிடைக்கும்போது உலகம் எப்படிப்பட்டவரை வேண்டுமானாலும் அபவாதத்தில் சிக்க வைத்துவிடும் என்பது மட்டும் அதனால் அப்போது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.


20. அபவாதமும் ஆக்கிரமிப்பும்

கணவனை இழந்து பல நாட்கள் வரை தன்மேல் படராமலிருந்த ஓர் அபவாதம் இப்போது படரத்தொடங்கி விட்டதை எண்ணி ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். ஊர் வாயை மூட முடியாது. மூடுவதற்குச் சரியான உலை மூடியும் இல்லை என்பதை அவள் இப்போதுதான் நன்றாகப் புரிந்து கொண்டாள்.

மிகவும் அழகாகவும், ஆஜானுபாகுவாகவும் கம்பீரமாகவும் இருந்தது இராயசம் அச்சையாவின் தவறும் இல்லை. அவள் கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்ணாக இருந்தாள். பரந்த மார்பும், திரண்ட தோள்களும் அழகிய முகமண்டலமும் உடைய சுந்தர புருஷனாக இருந்தார் அவர்.

மதுரையில் போய்த் தங்கியிருந்த நாட்களில் தவிர்க்க முடியாத அரசியல் யோசனைகளுக்காக அவர் உடனிருக்க நேரிடும் என்று கருதி அவரையும் அழைத்துச் சென்றிருந்தாள் அவள்.