பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

ராணி மங்கம்மாள்

நந்தவனத்தில் கேட்டது மனத்தைப் பாதித்தாலும் அவள் பொறுமையாக இருக்க முயன்றாள். மனித இயல்பை எண்ணி வியப்பதைத் தவிர அவளால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை.

உலகில் மிக உன்னதமான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் மகாகவிகளாகிறார்கள். மிகக் கொச்சையான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் தங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றியே வம்பு களையும் வதந்திகளையும் கற்பித்து மகிழ்கிறார்கள்.

மிக உயர்ந்த கற்பனை கவிதையாகிறது. அரைவேக்காட்டுக் கற்பனை வதந்தியாகிறது. அறிவும் காரணமும் அழகும் அமைப்பும் கலவாத தான்தோன்றிக் கற்பனைதான் வதந்தி, அறிவின் அழகும் அடக்கத்தின் மெருகும் கலந்த வதந்திதான் கற்பனையாகிறது. பணிப் பெண்களின் நிலைமைக்கு அவர்கள் இந்தப் போக்கில் இப்படித்தான் கற்பனை செய்ய முடியும் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. அப்போது அவர்களுடைய பரபரப்பையும் பதற்றத்தையும் அதிகப்படுத்தும் என்றெண்ணி ஓசைப்படாமல் திருத்துழாய் மட்டுமே பறித்துக் கொண்டு மெல்லத் திரும்பிவிட்டாள் அவள்.

"அரங்கேசா! இதுவும் உன் சோதனையா? வெளியே எல்லைகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் விரோதங்களும் ஆக்கிரமிப்பு எண்ணங்களும் போதாதென்று இப்படி மனத்திற்குள்ளேயே குழம்பித் தவிக்கவும் ஓர் அபவாதத்தைத் தந்துவிட்டாயே!" என்று வைகறை வழிபாட்டை முடித்துவிட்டு இறைவனுக்கு அர்ச்சித்த திருத்துழாயைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும்போது தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் அவள். மனம் சிறிது கலக்கமுற்றாலும் தேற்றிக்கொண்டாள். கூரிய முள்ளிலிருந்து ஆடையை எடுப்பது போல் ஆடையும் கிழியாமல், முள்ளும் குத்தாமல் அந்த அபவாதத்தைப் பொறுத்தவரையில் நடந்துகொள்ள முயன்றாள். சில சிறிய அபவாதங்களைத் தடுத்துக் களைகிற முயற்சிகளின் மூலமாகவே அவை பெரிய அபவாதங்களாக உரு எடுத்துவிடும். சில அபவாதங்களை அவற்றின் வெளியே தெரியாத அடிமண் வேரை அறுத்து மேற்கிளைகள் வாடி அழியச் செய்யவேண்டும்.