பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

ராணி மங்கம்மாள்

நரசப்பய்யாவும் ஊரில் இல்லாத நிலையை அறிந்து தஞ்சையை ஆண்டுவந்த ஷாஜி மதுரைப் பெருநாட்டுக்குச் சொந்தமான நகரங்களையும், சில ஊர்களையும் தனது சிறுபடைகளை ஏவிக் கைப்பற்றிவிட்டான். எதிர்பாராதபடி திடீரென்று அந்த ஆக்கிரமிப்பு நடந்துவிட்டது.

கவனக் குறைவாக அயர்ந்திருந்த சமயம் பார்த்து அவன் செய்த ஆக்கிரமிப்பு மங்கம்மாளுக்கு ஆத்திரமூட்டியது. முன்பெல்லாம் இப்படிப்பட்ட அண்டை வீட்டார் ஆக்கிரமிப்புகளைச் சமாளிக்கப் பாதுஷாவின் படையுதவியையும், படைத் தலைவர்களின் உதவியையும் நாடுவது அவள் வழக்கமாயிருந்தது. இப்போது அந்த வழக்கத்தையும் அவள் கைவிட்டிருந்தாள். பக்கத்து வீட்டுப் பகைமைகளை ஒழிக்கத் தொலைதூரத்து அந்நியர்களின் படையுதவியை நாடுவது ஏளனமாகப் பார்க்கப்பட்டது. சொந்தத்தில் எதுவும் செய்யத் திராணியற்ற கையாலாகாதவள் என்ற அபிப்பிராயம் தன்னைப்பற்றி மற்றவர்களிடம் ஏற்பட்டுவிட அது காரணமாகிவிடுமோ என்று அவளே அதை மறுபரிசீலனை செய்திருந்தாள். தஞ்சைநாட்டை ஆண்ட செங்கமலதாசனை வென்று அடித்துத் துரத்திய பின் மராத்திய மன்னனான ஏகோஜி சிறிது காலத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போய்விட்டான். ஏகோஜியின் புதல்வனான ஷாஜி பட்டத்துக்கு வந்திருந்தான். இந்த ஷாஜி பட்டத்துக்கு வந்த புதிதில் மங்கம்மாளுடைய நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமித்தபோது பாதுஷாவின் படைத்தலைவன் சுல்பீர்கானின் உதவியால் தான் அந்த ஆக்கிரமிப்பை முறியடித்திருந்தாள் அவள். அப்போது அப்படித்தான் செய்ய முடிந்திருந்தது.

இப்போது அதே ஷாஜி மறுபடியும் வாலாட்டினான். இம்முறை பாதுஷாவின் ஆட்களையோ, பிறர் உதவியையோ நாடாமல் தன் படைகளையும் தளபதி நரசப்பய்யாவையும் வைத்தே அவனை அடக்க விரும்பினாள் ராணி மங்கம்மாள். தளபதி நரசப்பய்யா திருவாங்கூரில் வென்று திறைப்பணத்தோடு திரும்பிக் கொண்டிருக்கும் செய்தி தெரிந்திருந்தது.