பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21. இஸ்லாமியருக்கு உதவி

தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஒடுக்குவதற்கு நரசப்பய்யா புறப்பட்டுச் சென்ற தினத்தன்று நல்ல நிமித்தம் என்று நினைக்கத்தக்க வேறொரு நிகழ்ச்சியும் திரிசிரபுரம் அரண்மனையில் நடைபெற்றது.

தஞ்சைக்குப் புறபட்டுச் சென்ற படைகளை அனுப்பிவிட்டு உள்ளே சென்ற ராணி மங்கம்மாளிடம் அரண்மனைச் சேவகன் ஒருவன் பவ்யமாக வந்து ஏதோ சொல்லும் குறிப்போடு வணங்கி நின்றான். தயங்கி நின்ற ராணி என்ன என்று வினவும் குறிப்போடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குறிப்பறிந்து சொல்லலானான்.

"கிழிந்த ஆடையும் அழுக்கடைந்த தோற்றமுமாகப் பக்கிரி போல் தோற்றமளிக்கும் இஸ்லாமியர் ஒருவர் தங்களைக் காண வேண்டுமென்று வந்திருக்கிறார்."

"என்ன காரியமாகக் காண வேண்டுமாம்?"

"காரியம் என்னவென்று அவர் சொல்லவில்லை. தாங்கள் விரும்பினால் சந்திக்கலாம். இல்லாவிட்டால் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறோம்."

"திருப்பி அனுப்ப வேண்டாம் உடனே வரச்சொல் பார்க்கலாம். பாவம் அவருக்கு என்ன சிரமமோ?"

மிகவும் ஏழையாகவும் எளியவராகவும் தென்பட்ட அந்தப் பக்கிரியை அப்போதிருந்த போர் அவசரத்தில் ராணி மங்கம்மாள் சந்திக்க மாட்டாள் என்றுதான் அரண்மனைக் காவலர்கள் நினைத்தார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக அவள் உடனே அவரைச் சந்திக்க இணங்கியது ஆச்சரியத்தை அளித்தது. அந்தப் பக்கிரியை அழைத்து வந்து காவலர்கள் ராணியின் முன்னே நிறுத்தினார்கள்.